/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பனி, சாரல் மழையால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
/
பனி, சாரல் மழையால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
பனி, சாரல் மழையால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
பனி, சாரல் மழையால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு
ADDED : நவ 28, 2024 05:48 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து பெய்யும் சாரல் மழை, பனியால் மல்லிகைப் பூக்கள் விளைச்சல் பாதித்துள்ளது.
ஆண்டிபட்டி பகுதியில் டி.ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, திம்மரசநாயக்கனூர், ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, சித்தார்பட்டி, ராஜதானி, மஞ்சிநாயக்கன்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் மல்லிகை பூக்கள் உள்ளூர் தேவைக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மல்லிகை பூக்கள் விளைச்சலுக்கு ஏற்றதாக இல்லை. விளைச்சல் குறைவால் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு மல்லிகை பூக்கள் வரத்து இல்லை.
குறைந்தளவு வரும் மல்லிகை பூக்கள் விலை கிலோ ரூ.1500 வரை விலை போகிறது. விலை இருந்தும் விளைச்சல் இல்லாதது மல்லிகை சாகுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றம் தருகிறது. கவாத்து செய்யப்பட்ட குச்சிகளை வெளியூரிலிருந்து வரும் விவசாயிகள் மல்லிகைச் செடி நாற்று விளைவிக்க கொண்டு செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: வெயில், மற்றும் கோடை காலம் மல்லிகை பூக்கள் விளைச்சலுக்கு சாதகமாக இருக்கும். ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு கோடை காலத்தில் 2 முதல் 3 டன் வரை மல்லிகை பூக்கள் வரத்து இருக்கும்.
தற்போது தினமும் 10 முதல் 20 கிலோ அளவிற்கு கூட வரத்து இல்லை. விளையும் பூக்களும் திரட்சி இன்றி உள்ளது. மல்லிகை பூக்களுக்கு விலை கிடைக்கும் நேரத்தில் விளைச்சல் இல்லை.