/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் சாகுபடியாகும் காஷ்மீர் ஆப்பிள் ரகங்கள்; வடுகபட்டியில் முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
/
பெரியகுளத்தில் சாகுபடியாகும் காஷ்மீர் ஆப்பிள் ரகங்கள்; வடுகபட்டியில் முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
பெரியகுளத்தில் சாகுபடியாகும் காஷ்மீர் ஆப்பிள் ரகங்கள்; வடுகபட்டியில் முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
பெரியகுளத்தில் சாகுபடியாகும் காஷ்மீர் ஆப்பிள் ரகங்கள்; வடுகபட்டியில் முன்னாள் ராணுவ வீரர் அசத்தல்
ADDED : நவ 01, 2024 04:32 AM

தேனி: ஆப்பிள் சாகுபடி என்றாலே குளிர்ச்சியான மலை பிரதேசங்களில் விளையும் என்ற நிலையை மாற்றி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் ஆப்பிள் பழ சாகுபடி செய்து அசத்தி வருகிறார் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேதுராமன்.
இவர் 3 வகை ஆப்பிள் ரகங்களில் 200 மரக்கன்றுகளை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வருகிறார். தற்போது மரங்களில் பூ பூக்க துவங்கியுள்ளன.
வடுகபட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சேதுராமன் 55. இவரது தோட்டம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வால்கரடு செம்மண் கலந்த சரளை மண் நிலம் உள்ளது.
ஆப்பிள் மரங்கள், சிவப்பு நிற பலாபழ கன்றுகள், வால்நட், பீச் உள்ளிட்ட உயர்ரக பழ வகை செடிகளை நடவு செய்து பராமரித்து வருகிறார்.
வெப்பம் அதிகம் உள்ள பகுதியிலும் ஆப்பிள் சாகுபடி செய்து, அறுவடை செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆப்பிள் சாகுபடி பற்றி முன்னாள் ராணுவ வீரர் கூறியதாவது: எனது ராணுவ பணியில் இமயமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 26 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்த பகுதிகளில் ஆப்பிள்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும். நமது ஊரிலும் ஆப்பிள் செடிகள் வளர்க்க விரும்பினேன். சில ஆண்டுகளுக்குப் பின் அதிக வெப்பம் காணப்படும் ராஜஸ்தானில் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுவதாக அறிந்தேன்.
அதனைப் பற்றி விசாரித்தேன். அப்போது ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஹரிமன் ஷர்மா அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் வளரும் வகையில் ஆப்பிள் மர கன்றுகள் உற்பத்தி செய்வதும், அதுபற்றி ஆராய்ச்சி செய்வதும் தெரிந்தது. ஓய்வு பெற்ற பின் அவரை தொடர்பு கொண்டேன்.
அவரிடமிருந்து ஓராண்டு வயதுடைய அன்னா, ட்ராபிக் சுவீட், டார்செட் கோல்டன் ரக ஆப்பிள் மரக்கன்று குச்சிகளை 2023ல் பிப்ரவரியில் வாங்கி நடவு செய்து பாரமரித்து வருகிறேன்.
இந்த ரகங்கள் அதிக வெப்பத்தை தாங்கி வளரும் தன்மை உடையது. இதில் சில மரங்களில் கடந்த ஜூன், ஜூலையில் ஆப்பிள் அறுவடை செய்தேன். அதில் ஒரு பழம் 100 முதல் 150 கிராம் எடையில் இருந்தது.
ஜனவரியில் அறுவடை:
சில மரங்களில் தற்போது பூக்கள் பூக்க துவங்கி உள்ளது. இவை ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு தயாராகும். முதல் 5 ஆண்டுகள் மரத்திற்கு 20 -25 கிலோ வரை பழங்கள் அறுவடை செய்ய இயலும். 5 ஆண்டுகளுக்கு பின் ஒரு மரத்திற்கு 200 கிலோ வரை அறுவடை செய்ய இயலும்.
பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறையினரை தொடர்பு கொள்கிறேன். செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றேன் என்றார்.
வெப்ப மண்டலத்தில் வளரும் ரகம்
இச் சாகுபடி குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நந்தினி கூறுகையில்,' கொடைக்கானல் மலையடிவாரத்தில் பெரியகுளம் அமைந்துள்ளதால் நல்ல சீதோஷ்ண நிலையால் வடுகபட்டியில் ஆப்பிள் மரம் நன்கு வளர்ந்துள்ளது.
இந்த பயிர் வெப்ப மண்டலத்திலும் வளரும் ரகம். மகசூல் அறுவடைக்கு பின்தான் நிலைமை தெரியும்' என்றார்.

