/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளம் துார்வாராததால் மழை நீரை தேக்க முடியாத நிலை
/
குளம் துார்வாராததால் மழை நீரை தேக்க முடியாத நிலை
ADDED : ஆக 07, 2025 05:40 AM

போடி : போடி அருகே கோடங்கிபட்டி குருவன்குளம் தூர்வாராததால் களைச்செடிகள் ஆக்கிரமிப்பால் மழை நீரை முழுவதும் தேக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குருவன்குளம். 8 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக் குளத்தை நம்பி 200 ஏக்கர் பாசன வசதி பெறும்.
தற்போது குளத்தில் அதிகளவில் ஆகாயத்தாமரை, முட்செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீரை முழுவதுமாக தேக்கிட முடியவில்லை.
நிலங்களுக்கு மதகு மூலம் தண்ணீர் வெளியேற முடியாத வகையில் மண் மேவி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மண் மேவிய மதகு பாஸ்கரன், விவசாயி, கோடங்கிபட்டி : இக் குளத்தில் தண்ணீர் தேங்குவதன் மூலம் கோடங்கிபட்டியை சுற்றியுள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும். கிணறுகளில் நீர் மட்டம் உயரும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதன் மூலம் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள். குளம் தூர்வாராததால் ஆகாய தாமரை, முள் செடிகள் அதிகம் வளர்ந்து மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலை உள்ளது.
குளத்தில் உள்ள நீர் அருகே உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் வகையில் மதகுகள் உள்ளன. தற்போது மதகு முழுவதும் மண் மேவியதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் குளத்தின் நீரை நம்பி உள்ள விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நீர்வளத்துறையினர் கண்மாயை முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மதகில் உள்ள மண் அடைப்பை அகற்றி சீரமைக்க வேண்டும்.
குப்பை கொட்டும் இடமாக மாறிய குளம் பாண்டி, விவசாயி, கோடங்கிபட்டி : குருவன்குளத்தில் நீர் முழுவதும் தேங்கி 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 7 ஆண்டுகளுக்கு முன் குளத்தில் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றாமலும், பெயரளவுக்கு தூர்வாரப்பட்டன. அதன் பின் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற வில்லை. குளத்தின் தெற்கு பகுதியில் கால்நடைகள் தண்ணீர் அருந்த அமைக்கப்பட்ட படித்துறை தற்போது குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளது. இதனால் அருகே குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் இப்பகுதியை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
குளத்தில் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்றவும், சுற்றி தரமான கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.