/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முருகன் கோயில்களில் நடந்த கோலாகல திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
முருகன் கோயில்களில் நடந்த கோலாகல திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோயில்களில் நடந்த கோலாகல திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
முருகன் கோயில்களில் நடந்த கோலாகல திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : நவ 09, 2024 06:39 AM

தேனி: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தேனி சிவ கணேச கந்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மூலவர், உற்ஸவர் என ஒரே நேரத்தில் வடிவழகர் பெருமான், உற்ஸவர் வடிவழகருக்கு திருமண நிகழ்வுக்கான காப்பு கட்டுதல் நடந்தது.
வள்ளி,தெய்வானை சீர் முருகபெருமானுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் வடிவழகர் பெருமாள் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் பூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு அபிேஷகம் தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி டாக்டர் தியாகராஜன் செய்திருந்தார். திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு திருமண விருந்து நடந்தது. விருந்துக்கான மொய்ப்பணம் செலுத்திச் சென்றனர்.
தேனி பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகனாதபுரத்தில் உள்ள திருமுருகன் கோயில், முத்துத்தேவன்பட்டி வெற்றிவேல் முருகன் கோயில்களில் சஷ்டி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முருகப் பெருமாள் வள்ளி தெய்வானைக்கு நடைபெற்றது.
பின்னர் காலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை கழுத்தில் மங்கள நாணை சூடினார். கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்தை முழங்கினர். திருமண விருந்து வழங்கப்பட்டது.
கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் சண்முகநாதர், வள்ளி தெய்வானை கழுத்தில் காலையில் மங்கள நாணை சூடினார். பின் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சாம்பார் சாதம், புளியோதரை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. கம்பம் சுருளி வேலப்பர் கோயிலிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக கல்யாண சீர்கள், தாலி, மஞ்சள் கயிறு, மணமாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மெட்டி கொண்டு வரப்பட்டு மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
நெல்லை உமையொரு பாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் ஆகியோர் வள்ளி தெய்வானைக்கு சுந்தரவேலவர் சார்பில் திருமாங்கல்யத்தை அணிவித்தனர். மெட்டி அணிவிக்கப்பட்டு மணமாலை மாற்றப்பட்டது.
மாலையில் மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவத்துடன் கந்த சஷ்டி விழா முடிவடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் நேற்று மாலையில் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது.
வடுகபட்டி வள்ளி தெய்வசேனா செந்தில் முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.