/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்
/
ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்
ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்
ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் சீரமைக்காத கூட்டாறு பாலம்
ADDED : ஏப் 26, 2025 05:42 AM

கூடலுார் : கூடலுார் அருகே லோயர்கேம்பில் கூட்டாறு பாலம் சேதமடைந்து ஐந்து ஆண்டுக்கு மேலாகியும் சீரமைக்காததால் நீர்வரத்து வாய்க்கால் அழியும் நிலையை அடைந்துள்ளது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்காலின் துவக்கப்பகுதியில் கூட்டாறு பாலம் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கன மழையால் பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் கண்மாய் நிரம்புவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் நீர்வீழ்ச்சி அருகே ஏற்பட்ட மண் சரிவால் தண்ணீர் கண்மாய்க்கு வராமல் முல்லைப் பெரியாற்றில் கலந்தது. இந்நிலையில் கூட்டாறு பாலமும் சேதம் அடைந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு அங்கிருந்து கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்மாய்க்கு வரும் நீர்வரத்து வாய்க்காலில் இருந்த கூட்டாறு பாலத்தை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் வாய்க்கால் செல்லும் பாதையின் இரு பகுதிகளிலும் உள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்துள்ளது. மேலும் வாய்க்காலும் முழுமையாக அழியும் நிலையை அடைந்துள்ளது. அதனால் விரைவில் பாலத்தை சீரமைத்து வரும் ஜூன் மாதம் முதல் போக நெல் சாகுபடி துவங்கும் போது தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.