ADDED : மே 11, 2025 11:37 PM

போடி : போடி பகுதியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர்வரத்து இன்றி கொட்டகுடி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
போடிப் பகுதியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா பகுதி மட்டும் இன்றி குரங்கணி, கொட்டகுடி உள்ளிட்ட மலைப் பகுதியில் மழை பெய்யாத நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. எப்போதும் வற்றாமல் நீர் அருவி விழுந்து கொண்டு இருக்கும் குரங்கணி, கொட்டகுடி, நரிப்பட்டி பகுதியில் நீர்வரத்து இன்றி வறண்டு உள்ளதால் நீர் அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதனால் ஆற்றின் ஓரங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஆற்றின் நீரை நம்பி வாழும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.