/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பரமசிவன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
/
போடி பரமசிவன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 04, 2025 05:35 AM
போடி: தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
போடி பரமசிவன் கோயில் மலைமேல் அமைந்துள்ளது. பரமசிவன் சுயம்பு மூர்த்தியாகும், வலது பக்கம் லட்சுமி நாராயணன், இடது பக்கம் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தனியாக வீற்றிருக்கிறார். விநாயகர், ஆஞ்சநேயர், லாட சன்னாசி உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. சித்திரை திருவிழா, கார்த்திகை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
இக் கோயிலில் வேண்டியவருக்கு வேண்டிய வரமும், குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பிறப்பதாக ஐதீகம்.
இக்கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தற்போது புதிதாக புனரமைக்கப்பட்டு மண்டபத்துடன் பெரிய அளவில் ஆஞ்சநேயர், முன் நுழைவாயில் சிவன் சிலை புதிதாக செய்யப்பட்டு இன்று காலை 9:15 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக ஹோமம் கும்பாபிஷேக யாக குண்டலஹோமம் நடைபெற்று வருகிறது. புனித நீரை யாக சாலையில் வைத்து பூஜை செய்தனர்.
ஏற்பாடுகளை போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் நாராயணி, தொழிலதிபர் பரமசிவம், அ.தி.மு.க., மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சேதுராம் உட்பட புனரமைப்பு உபய தாரர்கள் செய்து வருகின்றனர்.