/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு, சாக்கடை வசதி இன்றி சுகாதார சீர்கேட்டில் மக்கள் பரிதவிப்பு மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்
/
ரோடு, சாக்கடை வசதி இன்றி சுகாதார சீர்கேட்டில் மக்கள் பரிதவிப்பு மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்
ரோடு, சாக்கடை வசதி இன்றி சுகாதார சீர்கேட்டில் மக்கள் பரிதவிப்பு மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்
ரோடு, சாக்கடை வசதி இன்றி சுகாதார சீர்கேட்டில் மக்கள் பரிதவிப்பு மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்
ADDED : அக் 12, 2024 05:13 AM

போடி: போடி அருகே மணியம்பட்டி ஊராட்சியில் சாக்கடை, ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், மணியம்பட்டி ஊராட்சியில் இந்திரா காலனி, நடுத்தெரு, தெற்கு தெரு, ஒண்டி வீரப்பசாமி கோயில் ரோடு, ஊராட்சி அலுவலகம் ரோடு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் அடங்கி உள்ளன. உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊராட்சி அலுவலகம், ஒண்டிவீரப்பசாமி கோயில் தெரு அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி கீழ்பகுதியில் பைப்லைன் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் குடிநீர் வீணாக செல்கிறது. ஊராட்சி அலுவலக பின்புறம் சுகாதாரகேடு ஏற்படுத்தும் வகையில் குப்பை தேங்கியுள்ளன. இந்திரா காலனி செல்லும் ரோட்டில் விபத்து ஏற்படும் நிலையில் சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்தும், ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே நீட்டியபடி உள்ளது. அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் கருத்து:
கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
கர்ணன், மணியம்பட்டி: இந்திரா காலனி தெற்கு தெருவில் சாக்கடை சிறு பாலம் சேதம் அடைந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே நீட்டிய நிலையில் உள்ளது. நூலக கட்டடம் இருந்தும் புத்தகங்கள் மாயமானதால் பயன்பாடு இன்றி உள்ளது.
தெருக்களில் குப்பை அகற்றம்,சாக்கடை தூர்வாருதல் பணி நடப்பது இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.
சேகரமாகும் குப்பை தெற்கு தெரு அருகே உள்ள ஓடையில் கொட்டி வருகின்றனர். அவற்றை முறையாக அகற்றாமல் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர்.
இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது.
கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சலால் பாதிப்பு அடைகின்றனர். நூலகம் அருகே குடிநீருக்கான பைப் லைன் சேதம் அடைந்து பல நாட்கள் ஆகியும் பழுது நீக்கம் செய்யாதால் குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. சேதம் அடைந்த சாக்கடை சிறு பாலத்தை சீரமைத்து குப்பை அகற்றி சாக்கடையை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வசதி தேவை
அபிமன்னன், மணியம்பட்டி : மணியம்பட்டியில் இருந்து ஒண்டி வீரப்ப சாமி கோயில் செல்லும் பாதையில் ரோடு போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
சீரமைப்பு பணிமேற்கொள்ளாதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு ஒண்டிவீரப்பசாமி கோயில் செல்லும் ரோட்டில் மின்னல் தாக்கியதில் புளியமரம் சேதம் அடைந்து கீழே விழுந்து கிடக்கிறது.
விழுந்து கிடந்த மரத்தை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அருகே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைந்து உள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து செல்ல சிரமம் அடைகின்றனர்.
சேதம் அடைந்த ரோட்டை சீரமைப்பதோடு, போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.