ADDED : அக் 24, 2024 02:38 AM

கூடலுார்:குமுளி மலைப்பாதை இரைச்சல் பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு மண் சரிவு ஏற்பட்டது.
தமிழக - கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மலைப்பாதையில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும்.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துாரம் பல ஆபத்தான வளைவுகளை கொண்டதாகும்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு இரைச்சல் பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது.
ரோடு முழுவதும் மண் மேவி இருந்ததால் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மீட்பு குழுவினர், லோயர்கேம்ப் போலீசாருடன் இணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் குவிந்திருந்த மண்ணை அகற்றும் போது மழை பெய்ததால் சிரமம் ஏற்பட்டது.
அதிகாலை 4:00 மணிக்கு சீரமைப்பு பணியை முடித்தனர். மண் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் லோயர்கேம்பிலும், தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் குமுளியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. சீரமைப்பு பணி முடிந்தவுடன் போக்குவரத்து துவக்கப்பட்டது.