/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் - மெத்தனம்; கிராம மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் அவலம்
/
முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் - மெத்தனம்; கிராம மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் அவலம்
முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் - மெத்தனம்; கிராம மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் அவலம்
முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் - மெத்தனம்; கிராம மக்கள் தொற்று நோயால் பாதிக்கும் அவலம்
ADDED : செப் 03, 2025 01:07 AM

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தலைமதகுப் பகுதியில் உள்ள லோயர்கேம்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இது தவிர ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கருணாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆற்றில் உறை கிணறு அமைத்து பம்பிங் செய்து குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
லோயர்கேம்ப், கூடலுார் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இதனை பம்பிங் செய்து குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை தடுப்பதற்காக கூடலுார் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடியால் பணிகள் நடக்காமல் நிதி வீணானது.
தொடர்ந்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் கிராம மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகத்தினர் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கிராம மக்கள் கழிவு நீர் கலக்கும் பிரச்னையை முன் வைத்தனர். அதற்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
அதிகாரிகள் ஆர்வமில்லை மொக்கப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர், கருணாக்கமுத்தன்பட்டி: ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் இதற்கான விவாதம் நடந்தது.
அதிகாரிகளின் மெத்தனத்தால் தொடர்ந்து கழிவு நீர் கலந்து வருகிறது. இதில் கிராம மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.