/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காமக்காபட்டியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்
/
காமக்காபட்டியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்
ADDED : மே 19, 2025 05:27 AM

தேவதானப்பட்டி, : ''காமக்காபட்டி பகுதியில் இரு மாதங்களாக ஆடுகள், நாய்களை கொன்ற சிறுத்தை 20 நாட்கள் இடைவெளியில் நேற்று இரவு, மீண்டும் கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது. கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி பகுதியில் 2 மாதங்களாக ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை தொடர்ச்சியாக தோட்டங்களில் வளர்க்கப்படும் காவல் நாய்கள், கன்றுக்குட்டியை கடித்து கொல்வது தொடர்கிறது. இதனால் அப்பகுதியில் விவசாயிகள், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரை, காமக்காபட்டி புஷ்பராணி நகரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய இரு இடங்களில் கேமரா பொருத்தினார்.
இதுவரை பதிவில்லை பிடிப்பதற்கான எவ்வித முன்னேற்றமும் இல்லை. கூண்டு வைத்து பிடிப்பதற்கு வனத்துறை முயற்சிக்கவில்லை.
மீண்டும் அட்டகாசம்
மே மாதம் துவக்கத்தில் இருந்து சிறுத்தை நடமாட்டம் இல்லாததால் விவசாயிகள், பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சிறுத்தை இடம் மாறி சென்றதாக நினைத்தனர். இந்நிலையில் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரெங்கராஜ் 45, காமக்காபட்டி தோட்டத்தில் வளர்த்து வரும் கன்றுக்குட்டியை நேற்று முன்தினம் இரவு சிறுத்தை கடித்துக் கொன்றது. அங்கிருந்து 50 அடி துாரம் புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று மீண்டும் கடித்து குதறியது. ரேஞ்சர் ஆதிரை பார்வையிட்டார். கெங்குவார்பட்டி கால்நடை டாக்டர் சித்ராதேவி இறந்த கன்றுக்குட்டியை உடற்கூராய்வு செய்தார்.
சந்தேகம்
கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது தாய் சிறுத்தை என தெரிகிறது. ஏனெனில் இதே பகுதி அருகே நேற்று முன்தினம் காலை டம்டம்பாறை செல்லும் வழியில் புலிப்புடவு காப்புக்காடு பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற 10 மாத பெண் சிறுத்தை குட்டி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.