ADDED : ஜூலை 29, 2025 05:22 AM

தேனி; தேனி மாவட்டம் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி 65,யை கொலை செய்த ராஜனுக்கு 52, ஆயுள் தண்டனை விதித்து முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி வெங்கடாசலபுரம் தெற்கு தெரு விவசாயி ராமசாமி 65. இவரது தோட்டம் ஊருக்கு அருகில் உள்ளது. இந்த தோட்டத்தை சுற்றி, அதே ஊரை சேர்ந்த ராஜனின் தோட்டம் உள்ளது. இதனால் ராஜனுக்கும், ராமசாமிக்கும் தோட்டத்திற்கு செல்ல பாதை குறித்து பிரச்னை இருந்தது. இது தொடர்பாக வழக்கில் ராமசாமிக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனால் ராஜனுக்கு ராமசாமி மீது முன்விரோதம் ஏற்பட்டது. 2021 செப். 23ல் தோட்டத்தில் இருந்த ராமசாமியின் மனைவி லட்சுமியை, ராஜன் திட்டினார்.
ஆத்திரம் அடைந்த ராஜன் மறுநாள் ராமசாமியை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த ராமசாமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் இறந்தார். வீரபாண்டி போலீசார் ராஜனை கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் ராஜனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.