ADDED : ஏப் 24, 2025 03:13 AM

கம்பம்,:தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று இரவு முன்விரோதத்தில் பெண் போலீஸ் ஏட்டு அம்பிகாவை 43, கூடலுாரை சேர்ந்த குபேந்திரன் 60, அரிவாளால் வெட்டினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கூடலுார் கே.கே. நகரில் வசிப்பவர் அம்பிகா. இவர் கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். இவரது கணவர் பாண்டியராஜன் வழக்கறிஞர். இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் குபேந்திரன் என்பவருடன் இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்துள்ளது.
அம்பிகா நேற்று இரவு 8:15 மணியளவில் கம்பம் மெயின் ரோடு அரச மரம் அருகே உள்ள பூக் கடையில் சீருடையில் பூ வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது முன்விரோதத்தை மனதில் வைத்து குபேந்திரன், அம்பிகாவை கீழே தள்ளி விட்டு அரிவாளால் வெட்டினார். இதில் இடது கண்ணிற்கு கீழ் காயம் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குபேந்திரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். காயமடைந்த அம்பிகா தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

