/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாண்டவர் ஒரு மாதத்திற்கு பின் மீண்டார் எரிக்கப்பட்டவர் யார் என போலீஸ் குழப்பம்
/
மாண்டவர் ஒரு மாதத்திற்கு பின் மீண்டார் எரிக்கப்பட்டவர் யார் என போலீஸ் குழப்பம்
மாண்டவர் ஒரு மாதத்திற்கு பின் மீண்டார் எரிக்கப்பட்டவர் யார் என போலீஸ் குழப்பம்
மாண்டவர் ஒரு மாதத்திற்கு பின் மீண்டார் எரிக்கப்பட்டவர் யார் என போலீஸ் குழப்பம்
ADDED : டிச 25, 2024 03:09 AM
கடமலைக்குண்டு,:தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மகன் என நினைத்து எரித்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் அவர் திரும்பி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்தவர் யார் என போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தங்கமலை 58, கூலித் தொழிலாளி. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், மணிகண்டன் 32, என்ற மகனும் உள்ளனர். மணிகண்டனுக்கு முருகேஸ்வரி என்பவருடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் தங்கமலை வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டில் வசித்தனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு இருந்துள்ளது. இதன் காரணமாக முருகேஸ்வரி கோபித்துக் கொண்டு குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த மாதம் தங்கமலை தனது மனைவி செல்வத்திடம் தான் கும்பகோணத்திற்கு வேலைக்கு செல்வதாகவும், திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார். மனைவி வீட்டிற்கு மணிகண்டன் சென்று இருக்கலாம் என தாயார் செல்வம் கருதி இருந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனின் வீட்டில் இருந்து நவ.13ல் துர்நாற்றம் வீசியது. வீட்டை திறந்து பார்த்த போது கட்டிலுக்கு அடியில் அழுகிய நிலையில் ஆணின் உடல் கிடந்துள்ளது.
தனது மகன் தான் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து விட்டார்' என தாயார் செல்வம் கதறி அழுதார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின் பிரேத பரிசோதனை செய்து உடலை எரித்தனர்.
மாண்டவர் மீண்டார்
இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் எவ்வித சலனமும் இல்லாமல் தனது தாயை தேடி வீட்டிற்கு வந்துள்ளார். இதை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எங்கே சென்று இருந்தாய் என கேட்டபோது தான் வெளியூரில் தங்கி வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இறந்ததாக கருதி எரிக்கப்பட்டவர் உயிருடன் வந்ததும் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
கடமலைக்குண்டு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்ததில் வீட்டில் இறந்து கிடந்தது தங்கமலையாக இருக்கலாம் என செல்வம் தெரிவித்துள்ளார்.
போலீசார் குழப்பம்
இவர்கள் குடும்பத்தில் யாருக்கும் அலைபேசி கிடையாது என்றும் வெளியூர் வேலைக்கு சென்றவர்கள் தானாக வரும் வரை அவர்களை தேடுவதில்லை என்றும் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை அவரது மருமகள் முருகேஸ்வரியும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் செல்வம் மற்றும் முருகேஸ்வரியிடம் விசாரிக்கின்றனர்.
இறந்தது தங்கமலையா என்றும் அவர் எப்படி இறந்தார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.