/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு அணை 102 வது நாட்களாக 55 அடியாக உயர்ந்தது
/
மஞ்சளாறு அணை 102 வது நாட்களாக 55 அடியாக உயர்ந்தது
ADDED : செப் 30, 2024 05:14 AM

தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மஞ்சளாறு அணையில் 61 மி.மீ., மழை பெய்து உபரிநீர் மதகு வழியாக வெளியேற்றப்படும் நிலையில், 57 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ந்து 102 நாட்கள் 55 அடியாக உயர்ந்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே 7 கி.மீ., தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. முருகமலை, வறட்டாறு, இருட்டாறு, தலையாறு, பெருமாள் மலை பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து ஏற்படும். அணையின் மொத்த உயரம் 57 அடி. அணை பாதுகாப்பு கருதி 55 அடி வரை நீர் தேக்கப்படும். அணையின் நீர் கையிருப்பு 435 மி. கன அடியாகும். நேற்று முன்தினம் இரவு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு 7:00 மணிக்கு சாரல் மழை யாகவும், இரவு 8:00 முதல் 11:00 மணி வரை கன மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு அணை பகுதியில் 61 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 184 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, இதனை அப்படியே இரு கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
100 நாட்கள் சாதனை:
மஞ்சளாறு அணையில் 1967ல் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறந்து 57 ஆண்டுகளில் முதன் முறையாக வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே கடந்த ஜூன் 20 முதல் நேற்று (செப்.29) வரை 102 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது. இதுவே முதன் முறையாகும். இதனால் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பாசன கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மஞ்சளாறு அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் செல்வதால் கரையோரம் பகுதி மக்களுக்கு பொதுப் பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
--