ADDED : நவ 17, 2025 01:55 AM

பெரியகுளம்: பெரியகுளம் ஸ்ரீபாலசாஸ்தா கோயிலில் இன்று கார்த்திகை முதல் நாள், மண்டல பூஜையை வரவேற்க ஐயப்பனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு சிறப்பு உண்டு. பெரியகுளம் தாலுகா பகுதிகளில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை காண்பதற்கு மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வர். பெரியகுளம் தென்கரை தேனி ரோட்டில் மாவட்டத்தில் ஸ்ரீபாலசாஸ்தா கோயில் உள்ளது. அங்கு இன்று நவ.17ல் (கார்த்திகை முதல் நாள்) முதல் ஜன.15 (தை மாதம் முதல் நாள்) வரை மண்டல, மகரவிளக்கு பூஜை துவங்குகிறது. கோயிலில் தினமும் காலை 7:00 மணிக்கு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மாலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனைகள் நடக்க உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலமும், பாதயாத்திரையாகவும் பெரியகுளம் வழியாக சபரிமலைக்கு செல்வர். அவர்கள் இக்கோயில் வளாகத்தில் ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். பக்தர்கள் தங்கி செல்வதற்கு கோயிலில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தினமும் இசைக் கச்சேரியுடன் பஜனை நடக்கும். மண்டல பூஜையை வரவேற்க நேற்று கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் பெற்றுச் சென்றனர். அர்ச்சகர் பிரசன்னா வெங்கடேசன் பூஜைகளை செய்தார். இலவசமாக தங்குவதற்கு முன்பதிவுக்கு தொடர்புக்கு: 70101 02479.

