/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத்திருவிழா ஏற்பாடு தீவிரம்
/
மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத்திருவிழா ஏற்பாடு தீவிரம்
மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத்திருவிழா ஏற்பாடு தீவிரம்
மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத்திருவிழா ஏற்பாடு தீவிரம்
ADDED : ஏப் 10, 2025 06:33 AM
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தெப்பம்பட்டி அருகே உள்ளது வேலப்பர் கோயில். மலைப்பகுதியில் இயற்கையான சூழலில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனி சிறப்பு. சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.பக்தர்கள் வசதிக்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
முன்னேற்பாடுகள் குறித்து கோயில் செயல் அலுவலர் நதியா கூறியதாவது: விழாவிற்கு முதல் நாளே (ஏப்ரல் 13) கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்குவார்கள். கோயில் வளாகத்திலிருந்து 2 கி.மீ.,தூரத்திற்கு அப்பால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படும். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ,கழிப்பறை வசதிகள் பல இடங்களில் தற்காலிகமாக வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் வெயில் பாதிப்பை தவிர்க்க தரையில் விரிப்பு அமைக்கப்படும். பெண்கள் உடை மாற்றும் அறை, பாலூட்டும் மையத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் நெரிசலை தவிர்க்க வரிசையில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நாளில் தடையில்லா மின்சாரம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, போலீசார் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரு இடங்களில் மருத்துவ குழு செயல்படும். காவடி, பால்குடம் சுமந்து வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய வசதி செய்யப்படும். பக்தர்களின் வசதி, பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.