/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
/
இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
இனி எல்லாம் சுகமாகட்டும்...2025 வரமாகட்டும் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் மக்கள்
ADDED : டிச 31, 2024 06:43 AM

பணப்புழக்கம் குறைந்தது
நடேசன், தலைவர், தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம்.2024 ம் ஆண்டு விலைவாசி கூடி உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகளிடம் பணப்புழக்கம் குறைந்து காணப்பட்டது. உணவு தானியங்கள் விளைச்சல் அதிகரித்தது. பருத்தி, கோதுமை, நெல் போன்றவற்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தியது விவசாயிகளுக்கு நன்மை. தற்போது 5,12,18 என்று உள்ள ஜி.எஸ்.டி., வரியை ஒரே வரியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு பொருட்கள் ஏற்றுமதி குறைவாக இருந்தது. சிறு குறு நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் வங்கி கடன் உள்ளிட்ட சலுகைகளின் பிரதிபலன் 2025ல் தெரியும். இந்தாண்டு இந்திய ரூபாய்கான மதிப்பு டாலரில் மிகவும் அதிகரித்துள்ளது.
அரசு அலுவலர்களுக்கு ஏமாற்றம், நெருக்கடி
தாஜ்தீன், மாவட்ட தலைவர், அரசு ஊழியர் சங்கம், தேனி.மாநில அரசு வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகளான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம், 4 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர் பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே போல் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என காத்திருந்தனர். விடியோ கான்பிரன்ஸிங் மூலம் விடுமுறை நாட்களில் கூட புள்ளி விபரங்கள் கேட்கும் பணி தொடர்ந்ததால் பல அலுவலர்கள் நெருக்கடிக்கு ஆளாகினர். காலப்பணியிடங்களால் மூவர் பணியை ஒருவர் பார்க்கும் நிலை தொடர்கிறது.
தொழிலில் நெருக்கடி அதிகம்
ஸ்ரீகுமார் ராஜேந்திரன், தொழிலதிபர், கம்பம் :
2024 ம் ஆண்டை பின்னோக்கி பார்க்கையில் மலைப்பாக உள்ளது. அனைத்து விதமான மூலப் பொருள்களின் விலை உயர்வால் தொழிலில் லாபமில்லை. அதே சமயம் நாம் தயாரிக்கும் பொருள்களின் விலையை உயர்த்தினால் வியாபாரம் குறையும். தரத்தையும் குறைக்க முடியாது. தொழிலாளர் பிரச்னை, மின்கட்டணம், தொழில்வரி பல மடங்கு உயர்வு என நெருக்கடிகள் அதிகம். 2025ல் தொழில் நன்றாக இருக்க ஜி.எஸ்.டி. வரியை அனைத்து பொருள்களுக்கும் குறிப்பாக ஒட்டல், பேக்கரிகளுக்கான மூலப் பொருள்களின் வரி ஒரே மாதிரி இருக்க வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தொழில் நடத்த முடியும்.
புதிய வியாபார முயற்சி
பாண்டிப்பிரியா. தொழில் முனைவோர் உத்தமபாளையம்:
விவசாயம் செய்த எனக்கு தொழில்முனைவோர்' என்ற அந்தஸ்தை 2024 வழங்கியதைமகிழ்வாக உணர்கிறேன்.வியாபாரம் துவக்க காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் ஆராய்ச்சி மையத்தின்தொழில்நுட்ப ஆலோசனை கிடைத்தது. கோதுமையில் மதிப்பு கூட்டப்பட்டுகுழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினர் வரை சாப்பிடக்கூடிய 15 வகையான ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறேன். இந்த உணவுகளுக்கு நல் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால்இந்த 2024 சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. வரும் ஆங்கில புத்தாண்டில் 100 மதிப்பு கூட்டப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து வளமான சமுகத்தை கட்டமைப்பதில் நானும் ஒரு பங்காற்றுகிறேன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது தீராத ஆசை.
அங்கீகாரம் கிடைத்த ஆண்டு
உமாமகேஸ்வரி, இல்லத்தரசி, சின்னமனுார்:
இயற்கை முறையில் தயாரித்த பஞ்சகாவியம் மூலம் இயற்கை முறையில் பத்தி, சாம்பிராணி,கம்ப்யூட்டர் சாம்பிராணி, தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனது திறமையை பாராட்டி மாவட்ட மகளிர் திட்ட பயிற்சியாளராக தேர்வு செய்தது மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் வாழ்வில் மறக்க முடியாத அங்கிகாரம் கிடைத்த ஆண்டாக 2024 பார்க்கிறேன். நிறைய பெண்கள் நான் கொடுத்த பயிற்சியால் வருவாய் ஈட்டி வருவதை பார்க்கும் போது மகிழ்வாக உள்ளது.பெண்கள் சுயமாக பொருளாதார ரீதியாக முன்னேற நான் வழங்கும் பயிற்சிகள் உறுதுணையாக உள்ளன. அதனால் முன்னேற நல்வாய்ப்பாக பார்க்கிறேன்.
வியாபாரம் குறைவு
ரமேஷ்குமார், வர்த்தகர், ஆண்டிபட்டி:
கொரோனா பாதிப்புக்குப்பின் வர்த்தகம் வளர்ச்சி பெறவில்லை. 2024ல் வர்த்தகத்தில் நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. விலைவாசி உயர்வு, குறைவான பணப்புழக்கம் சிறு வர்த்தக நிறுவனங்களை பாதிக்கச் செய்கிறது. பொதுமக்களிடம் சேமிப்பு குறைந்ததால் நடுத்தர வர்க்கத்தினர் வியாபாரம் குறைகிறது. முகூர்த்த மாதங்களில் நகை வர்த்தகம் சிறப்பாக இல்லை. தொழில், வர்த்தகத்தில் போட்டி அதிகரித்துள்ளது. வங்கி கடனுக்கான வட்டி, வரி இவற்றால் வரும் காலங்களில் சிறு தொழில், வர்த்தக நிறுவனங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம். வர்த்தகத்தில் நிர்ணயிக்கப்படும் இலக்கை அடைய முடியவில்லை முதலீடுக்கு ஏற்ற லாபமும் இல்லை.
மன நிறைவான ஆண்டு
ஜெயந்தி, தொழில்முனைவோர், கூடலுார்:
30 ஆண்டுகளுக்கும் மேலாக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். பல ஆண்டுகள் இத்தொழில் செய்து வந்தாலும் 2024 மன நிறைவு ஏற்படுத்திய ஆண்டாக இருந்தது. ஒவ்வொரு புத்தாண்டும் துவங்குவதற்கு முன் எடுக்கப்படும் உறுதிமொழி நிறைவேறியதா என பார்க்கும் போது 2024ல் எனக்கு நிறைவேறியுள்ளது. தையல் தொழில் மூலம் நமது வருவாயை பெருக்குவது ஒருபுறம் இருந்தாலும் என்னுடைய தொழில் நுனுக்கங்களை பலருக்கு அறியும் வகையில் இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் புத்தாண்டு இது போன்ற பெண்களுக்கு சிறந்த ஆண்டாக அமைய வேண்டும்.
மன நிறைவுதான்
ரோஹேஸ், போடி : எம்.காம்., படித்து முடித்தவுடன் ராணுவம், போலீஸ் என பல்வேறு அரசு வேலைகளுக்காக முயற்சி செய்தேன். வேலை கிடைக்காத நிலையில் அரசு வேலைக்காக காத்திருந்து ஆண்டுகளை கடத்த விரும்பவில்லை. பெரும் முயற்சியில் 2024 ம் ஆண்டு போடியில் உள்ள தனியார் வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக வேலை கிடைத்தது. கிடைத்த வேலையை ஓராண்டாக மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறேன். அரசு வேலைக்காக வீட்டில் இருப்பதை காட்டிலும், கிடைத்த வேலைக்கு சென்று வருவதால் எனக்கு மன நிறைவு தந்துள்ளது. உயர் பதவிக்கு செல்ல தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு போலவே வரும் ஆண்டும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
இன்பம் துன்பம் மாறி மாறி வந்தது--
எஸ்.சரஸ்வதி,குடும்பத்தலைவி, பெரியகுளம்.
--எனது கணவருக்கு தொழில் ஏற்றம், இறக்கமாக இருந்தது. காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் விலை அதிகளவில் இருந்தது. இதனால் எனது தோழிகளுடன் அவரவர் வீட்டில் காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கு ஆலோசனை செய்துள்ளோம். தீபாவளி பண்டிகை காலத்தில் பழைய மிக்ஸியை மாற்றி புது மிக்ஸி வாங்கினேன்.
தோழிகளுடன் இணைந்து மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடினோம். இதனால் எங்களுக்க புத்துணர்வு ஏற்பட்டது. பிள்ளைகளுக்கு துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிடுவதற்கு கற்று தந்தேன். மொத்தத்தில் இந்தாண்டு இன்பம் துன்பம் மாறி வந்தது என்றார்.
சுற்றுலா வளர்ச்சி பெற்றது
ஆர்.மோகன், சுற்றுலா ஆர்வலர், மூணாறு: கடந்த காலங்களில் கொரோனா பாதிப்புகளை கடந்து 2024ல் சுற்றுலா பெரும் வளர்ச்சி பெற்றது. கோடை, மழை, வசந்தம், குளிர் என ஆண்டில் நான்கு காலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. மூணாறை மையப்படுத்தி சுற்றியுள்ள மறையூர், காந்தலூர், வட்டவடை, மாங்குளம், ஆனச்சால் ஆகிய பகுதிகள் சுற்றுலாவில் முழு வளர்ச்சி பெற்றன. அட்வஞ்சர் டூரிசம் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மூணாறு உட்பட பிற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளுக்கு தேவையான உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பட்சத்தில் வரும் காலங்களில் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.