/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாடியில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் பழனிசெட்டிபட்டியில் அசத்தும் இல்லத்தரசிகள்
/
மாடியில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் பழனிசெட்டிபட்டியில் அசத்தும் இல்லத்தரசிகள்
மாடியில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் பழனிசெட்டிபட்டியில் அசத்தும் இல்லத்தரசிகள்
மாடியில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் பழனிசெட்டிபட்டியில் அசத்தும் இல்லத்தரசிகள்
ADDED : ஆக 11, 2025 04:10 AM

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வீடுகளில் வசிக்கும் 2 இல்லத்தரசிகள் தங்களது வீட்டு மாடிகளில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை தாவரங்கள், கீரைகள் சாகுபடி செய்து வீட்டு சமையலுக்கு பயன்படுத்தி வருவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்றைய சூழலில் நகர்ப் பகுதியில் மாடித்தோட்டம் அமைத்து, அதனை பராமரிப்பது பெரிய பணியாகும். ஆனால், அதனை கூடுதல் வேலையாக கருதாமல் செடிகளை பராமரிப்பதை அன்றாட பணியாக சில இல்லத்தரசிகள் மாற்றி வருகின்றனர். தேனி நகர் பகுதியை சுற்றி பல மாடிகளில் தற்போது காய்கறி செடிகள், மூலிகைகள், பூச்செடிகளை மாடிகளில் வளர்ப்பது அதிகரித்துள்ளது. அனைத்து மாடித் தோட்டங்களிலும் அலங்காரத் தாவரங்களை விட மூலிகைச் செடிகள், கீரைகள் அதிகம் வளர்ப்பது விழிப்புணர்வின் முதல்படியாக உள்ளது. இன்னும் சிலர் டி.வி., அலைபேசி உள்ளிட்டவற்றில் இருந்து விடுபட சிறந்த வழியாக மாடித்தோட்டம் பராமரிப்பு உள்ளது என, மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மாடித்தோட்டம் அமைத்து தங்கள் வீட்டில் தேவை இல்லாத பொருட்கள் செடிகள் வளர்ப்பில் தொட்டிகளாகிறது. இது தவிர கடைகளில் உரம், பூச்சி நோய் மருந்து வாங்காமல் வீடுகளில் பல்வேறு வகையான கரைசல்கள் தயாரித்து அதனை பயன்படுத்துகின்றனர். சிலர் மாடி, வீட்டுத்தோட்டம் பராமரிப்பு மன அழுத்தத்தை போக்குவதாகவும் கூறுகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த வெற்றிலை, மணத்தக்காளி, பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைச் செடிகள் கட்டாயம் இடம் பெறுகின்றன. இவற்றை பயன்படுத்தி வீடுகளில் ஆரோக்கிய உணவுகள் தயாரித்து உண்பது, உடலுக்கும் நன்மை பயக்கிறது. பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் தெருவில் மாடித்தோட்டம் அமைத்து அதனை பராமரித்து வரும் இல்லத்தரசிகள் மாசில்லா தேனி பகுதிக்காக பேசியதாவது:
உரமான காய்கறி கழிவுகள் யமுனாதேவி, இல்லத் தரசி: மாடியில் செடிகள் பராமரிக்க வேண்டும் என பல நாட்கள் முயற்சித்து வந்தேன். முதலில் உடைந்த சிறிய பிளாஸ்டிக் தொட்டிகளில் புதினா, பொன்னாங்கண்ணிக் கீரை வளர்க்க துவங்கினேன். பின் பெரிய தொட்டிகளில் பல்வேறு வகையான காய்கறிகள் வளர்க்க துவங்கினேன். கடந்தாண்டு தேனியில் நடந்த விவசாய கண்காட்சியில் நாட்டு அவரை, கத்தரி, மிளகாய், பாகற்காய் உள்ளிட்ட விதைகள் வாங்கி சாகுபடி செய்தேன். அதிக அளவில் காய்கறிகள் கிடைத்தன. தற்போது வீட்டில் சுமார் 18 க்கும் மேற்பட்ட தொட்டிகளில் இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பிரண்டை, மணத்தக்காளி, சுண்டல், பாசிப்பயறு, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், புதினா, குருவி தலை பாவற்காய், மற்றும் மருத்துவ குணம் உடைய அதலைக்காய், வெற்றிலை, மருதாணி உள்ளிட்டவை வளர்கின்றன. தொட்டிகளில் வளர்ப்பு ஊடகமாக மணல், செம்மண், தேங்காய்நார் பயன்படுத்துகிறேன். முட்டைகள் பயன்படுத்திய பின், அதன் ஓடுகளை அரைத்து பவுடராக மாற்றி அதனை உரமாக பயன்படுத்துகிறேன். இது தவிர வெங்காயத்தின் தோல், இறைச்சி, அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றுகிறேன். காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மட்டும் உரமாக பயன்படுத்துகிறேன். அறுவடை முடிந்ததும், தொட்டியில் அடுத்த காய்கறிகள் பயிரிடுகிறேன். கடைகளில் உரங்கள் பூச்சி மருந்து வாங்கி பயன்படுத்தியது இல்லை. சில செடி வளர்ப்பு முறைகள் பற்றி மாடித்தோட்டம் பராமரிக்கும் சிலரிடம் அடிக்கடி கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உடனடியாக பயன்படுத்துவேன்., என்றார்.
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஈஸ்வரி, பழனிசெட்டி பட்டி: எங்கள் வீட்டில் எலுமிச்சை, ஓமவல்லி, வெற்றிலை, சப்போட்டா, பூச்செடிகள் வளர்க்கிறோம். செடிகள் பராமரிப்பு பற்றி பள்ளி செல்லும் பேரக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். பக்கத்து வீட்டில் வளரும் செடிகளை பராமரிக்கும்போது அவர்கள், அங்கு சென்று கற்றுக்கொள்கிறார்கள். இதனை தினசரி பராமரிப்பது உடற்பயிற்சி போன்று புத்துணர்ச்சியாக உள்ளது. குழந்தைகளுக்கு பாடங்கள் கற்றுக்கொடுப்பதுடன் வீட்டில் சமையலுக்கு தேவையான காய்கறி பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதையும், பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை அலைபேசியில் நேரம் செலவிடுவதை தவிர்க்க, செடிகள் பரா மரிப்பை சொல்லி கொடுக்கலாம், என்றார்.