/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலை 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம் சேவை தேவை
/
மேகமலை 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம் சேவை தேவை
ADDED : நவ 09, 2024 06:06 AM
சின்னமனூர்: மேகமலை பகுதியில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டி தோட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மேகமலை திகழ்கிறது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட பகுதி தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி உள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை. மணலாறு பகுதியில் ஒரு துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் மட்டுமே உள்ளார்.
அவசர சிகிச்சைகள், பிரசவங்கள் என்றால் குறைந்தது 2 மணிநேரம் பயணம் செய்து சின்னமனூருக்கு வர வேண்டும். இரவில் வாகன வசதி இல்லை.
வனத்துறையும் அனுமதிக்காது. எனவே இங்குள்ள தோட்ட தொழிலாளர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைக்க வேண்டும். அதில் சுழற்சி முறையில் டாக்டர், செவிலியர் பணியில் அமர்த்த வேண்டும்.
அவசர தேவை மற்றும் மலைப்பகுதி என்பதால் இந்த சுகாதார நிலையத்திற்கென தனி ஆம்புலன்ஸ், டாக்டர்கள் பயன்படுத்த வாகன வசதி செய்யப்பட வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.