/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் முக்கிய இடங்களின் கண்காணிப்பு... அவசியம்
/
வைகை அணையில் முக்கிய இடங்களின் கண்காணிப்பு... அவசியம்
வைகை அணையில் முக்கிய இடங்களின் கண்காணிப்பு... அவசியம்
வைகை அணையில் முக்கிய இடங்களின் கண்காணிப்பு... அவசியம்
ADDED : ஆக 15, 2025 02:37 AM

தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை உள்ளன. கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பார்த்துச்செல்ல தவறுவதில்லை. 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்த நீர்த்தேக்கம், வலது, இடது கரைகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட பூங்காக்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு நாள் பொழுது போக்கும் இடமாக உள்ளது.
வைகை அணையின் நுழைவுப் பகுதியாக வலது, இடது கரைகளில் இரு இடங்களில் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இப்பகுதி வழியாகச்சென்று அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்துவிட்டு திரும்புவதற்கான வசதிகள் உள்ளன. வலது, இடது கரை நுழைவுப் பகுதியில் சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கான தனித்தனி இடங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகள் வாகனங்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வைகை அணையில் பாதுகாக்கப்பட்ட இடங்களாக சுரங்கப்பாதை, நீர் மின் நிலையம், அணையின் மேல் பகுதியில் நீர் வெளியேறும் மதகுகள் அமைந்துள்ள பகுதி, அங்குள்ள நீர்வரத்து அளவீட்டு அறை ஆகியவை பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ளன. இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. வைகை அணையின் இடது பக்கம் மேல் பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் பல நேரங்களில் அணையில் இறங்கி நீரின் ஆபத்தான பகுதிக்கு செல்கின்றனர். பூங்காக்களில் காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கட்டுப்பாடு இன்றி ஜோடிகளாக பல இடங்களில் அமர்ந்தும் சுற்றித்திரிந்தும் வருகின்றனர்.
வைகை அணையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் பணியாளர்களும் இவர்களை கண்காணிப்பதில்லை. போலீசாரும் அடிக்கடி ரோந்து வருவதில்லை.
கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் தற்போது வைகை அணை நீர்மட்டம் 70 அடி வரை உயர்ந்துள்ளது. அணை உயரம் 71 அடி. இந்நிலையில் அணையின் ஒட்டுமொத்த பகுதிகளையும் நீர்வளத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வைகை அணையின் முக்கிய இடங்கள், பூங்காக்களில் ஏற்கனவே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் சேதம் அடைந்தது. சேதமடைந்த இடங்களில் கேமராக்கள் மீண்டும் அமைக்கவில்லை. தற்போது இரு இடங்களில் மட்டுமே கேமராக்கள் மூலம் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வைகை அணையின் ஒட்டுமொத்த இடங்களையும் கேமராக்கள் மூலம் இணைத்து ஒரே இடத்தில் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் எந்த இடத்தில் இருந்தாலும் வாகனங்கள் எந்த வழியாக வந்து சென்றாலும் அவற்றை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.