ADDED : ஜூலை 23, 2026 12:34 AM

கூடலுார்: கூடலுாரில் மழையின்றி மானாவாரி பயிர்கள் கருகியது. இதனால் கருகிய பயிர்களுடன் உழவு பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கழுதை மேடு, கொங்கச்சிப்பாறை, பெருமாள் கோயில், லோயர்கேம்ப், பளியன்குடி, காஞ்சிமரத்துறை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. எள், தட்டை, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக தென்மேற்குப் பருவ மழை ஜூன், ஜூலையில் தீவிரமாக பெய்யும். இதனால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
பூக்கள் அதிகமாகி பலன்கள் கிடைக்கக்கூடிய இந்த நேரத்தில் வெப்பத்தால் பயிர்கள் கருகியுள்ளது. இனி மழை பெய்து பயிர்களை காப்பாற்றுவது சிரமம் என்பதால், தற்போது ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் உழவு செய்து வருகின்றனர்.
