/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து குறைவால் முருங்கை கிலோ ரூ.140 ஆக உயர்வு
/
வரத்து குறைவால் முருங்கை கிலோ ரூ.140 ஆக உயர்வு
ADDED : ஜன 09, 2024 06:11 AM
தேனி ; தேனி உழவர் சந்தையில் முருங்கைக்காய் வரத்து குறைவால் கிலோ ரூ.140க்கு விற்பனையானது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் சாம்பாருக்காக மாற்றுக் காய்கறிகளை தேர்வு செய்தனர்.
மாவட்டத்தில் முருங்கை சாகுபடி ஆண்டிபட்டி தாலுகா, தேனி தாலுகா, அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, தாடிச்சேரி, சின்னமனுார், போடி பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது.
அதிக சதைப்பற்றுடன் வளர்வதால் திறன் மிக்க முருங்கை காய் கிடைக்கிறது. மும்பை காய்கறி சந்தையில் தேனி முருங்கைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தேனி உழவர்சந்தைக்கு தினமும் 1 டன் அளவில் நாட்டு முருங்கை விற்பனைக்காக வந்தது. தற்போது மழை, தொடர் பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்து வரத்து 500 கிலோ, 300 கிலோ என குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.140க்கு விற்பனையானது.
குறைந்தது அவரை விலை
கடந்த டிசம்பரில் 200 கிலோ, 350 கிலோ என்ற அளவுகளில் உழவர்சந்தைக்கு வரத்து இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு வாரமாக 400 முதல் 500 கிலோ வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ நாட்டு அவரை நேற்று விலை குறைந்து ரூ.34க்கு விற்பனையானது.