அண்ணனுக்கு கொலைமிரட்டல்: தம்பி கைது
தேனி: கொலை வழக்கில் நீதிமன்றத்தில் பொய்சாட்சி கூற மறுப்பு தெரிவித்த அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பி அய்யனார் 37, என்பவரை வருஷநாடு போலீசார் கைது செய்தனர்.
வருஷநாடு சீலமுத்தையாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மலைச்சாமி 45. இவரது இளைய சகோதரர் அய்யனார். மலைச்சாமியின் மூத்த சகோதரரை தம்பி அய்யனார் கொலை செய்தது குறித்து இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கொலை வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அப்பகுதியில் மலைச்சாமி நடத்தும் பெட்டிக்கடை முன் நின்றிருந்த அய்யனார், நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக சாட்சிசொல்ல வேண்டும் என அண்ணன் மலைச்சாமியை வற்புறுத்தினார். இதற்கு மலைச்சாமி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார்அண்ணனை தாக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தார். அய்யனாரை வருஷநாடு போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
பெரியகுளம்: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய பிரகாஷ் 20,என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணிடம், கும்பக்கரை ரோடு ஆரோக்கியமாதா நகர் பிரகாஷ் 20, என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அப்பெண் கர்ப்பமானார். இது குறித்து அந்தப் பெண்ணும், அவரது பெற்றோர்களும் பிரகாஷிடம் கேட்டபோது திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு பிரகாஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். 21 வயது நிறைவு பெற்றவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதுவரை சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் இருவரும் வாழ்ந்தனர். பிரகாஷ் கோவைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் எந்த தகவலும் இன்றி காணாமல் போய்விட்டார். பாதிக்கப்பட்ட பெண், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மது பதுக்கிய முதியவர் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 75. இவரது வீட்டருகே 26 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். தேவதானப்பட்டி போலீசார் ராஜேந்திரனை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.
விபத்தில் இரு பெண்கள் காயம்
போடி: போடி தேரடி தெருவை சேர்ந்தவர் ராணி 47. மின்வாரிய அலுவலக பின்புறம் வசிப்பவர் பூமாரி 45. இவர்கள் இருவரும் போடி - தேனி செல்லும் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். போடி ஜே.கே., பட்டியை சேர்ந்த ராமேஸ்வரன் 40. என்பவர் டூவீலரில் அதிவேகமாக வந்ததில் நடந்து சென்ற பூமாரி, ராணி மீது மோதினார். கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
வாணி புகாரில் போடி தாலுகா போலீசார் ராமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் காந்திஜி வாசகர் சாலை தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் 55, இவரது மனைவி பூமணி 46. விவசாய தொழிலாளியாக உள்ள பிரபாகரனுக்கு சர்க்கரை , பிரஷர் இருந்துள்ளது. இதற்கென சிகிச்சை பெற்று வருகிறார். நோய் குணமாகவில்லையே என புலம்பி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை விழுங்கினார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்தவரை மகள் பிரமிளா மற்றும் மனைவி பூமணி சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்தாக தெரிவித்தனர். ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--