/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்; - கரையோர விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
/
முல்லைப் பெரியாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்; - கரையோர விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்; - கரையோர விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாற்றின் கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்; - கரையோர விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
UPDATED : அக் 29, 2025 08:05 AM
ADDED : அக் 29, 2025 07:54 AM

கூடலுார் : முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ஆறு சுருங்கியதால் சமீபத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ள நீரில் கரையோரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்தன. அதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றி ஆற்றில் கூடுதல் நீர் செல்வதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனுார், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக செல்லும் 47 கி.மீ., தூரமுள்ள முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையில் கலக்கிறது. ஆற்றின் இரண்டு பக்க கரைகளிலும் ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றியுள்ளனர். பல இடங்களில் தென்னந்தோப்புகளாகவும் மாறியுள்ளன. இதனால் ஆறு சுருங்கி கால்வாயாக மாறியுள்ளது.
இந்நிலையில் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கும் போது ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் சென்ற காட்டாற்று வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து ஆற்றின் போக்கு திசை மாறியது. இதனால் ஏற்பட்ட பலத்த சேதத்தில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடைபெறவில்லை. இதில் நில அளவைத் துறை, வருவாய்த்துறை, போலீஸ், நீர்வளத்துறை என பல துறைகள் இணைந்து ஆக்கிரப்புகள் அகற்ற வேண்டிய நிலை இருப்பதால், யார் இதனை ஒருங்கிணைத்து அகற்றுவது என தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் விவசாயத்துக்கு மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும், கால்நடைகளின் தண்ணீர் தாகத்தை தீர்ப்பதற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக முல்லைப் பெரியாறு உள்ளது. அதனால் ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

