/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு ஆய்வு அணையில் நீர்க்கசிவு, ஷட்டரின் இயக்கம் சரியாக உள்ளதாக தகவல்
/
முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு ஆய்வு அணையில் நீர்க்கசிவு, ஷட்டரின் இயக்கம் சரியாக உள்ளதாக தகவல்
முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு ஆய்வு அணையில் நீர்க்கசிவு, ஷட்டரின் இயக்கம் சரியாக உள்ளதாக தகவல்
முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு ஆய்வு அணையில் நீர்க்கசிவு, ஷட்டரின் இயக்கம் சரியாக உள்ளதாக தகவல்
ADDED : மார் 23, 2025 01:55 AM

கூடலுார்: முல்லைப்பெரியாறு அணையில் புதியதாக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் நடக்கும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்புக் குழு இருந்தது.
இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது. இந்நிலையில் 2024 அக்., 1 முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்பட்டது.
புதிய கண்காணிப்பு குழு
புதியதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் டிங்கு பிஸ்வால், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் உள்ளனர்.
அணையில் ஆய்வு
இக்குழுவின் முதல் ஆய்வு நேற்று அணையில் நடந்தது. முன்னதாக இக்குழு தேக்கடியில் இருந்து படகு மூலம் 14 கி.மீ., துாரமுள்ள அணைப்பகுதிக்கு சென்றனர். மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டனர்.
பேபி அணையின் கீழ் இறங்கியும் ஆய்வு செய்தனர். மெயின் அணையில் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்கத்தை கண்டறியும் சீஸ்மோகிராப், நில அதிர்வை கண்டறியும் ஆக்சிலரோ கிராப் ஆகிய கருவிகளையும் பார்வையிட்டனர்.
அணையில் இருந்து வெளியேறும் நீர்க்கசிவு அளவு எடுக்கப்பட்டது.
தற்போது அணையின் நீர்மட்டம் 113.25 அடியாக இருக்கும் நிலையில் நீர்க் கசிவு ஒரு நிமிடத்திற்கு 16 லிட்டராக இருந்தது. அணையின் நீர் மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு துல்லியமாக இருப்பதால் அணை பலமாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் மூன்றாவது ஷட்டரை இயக்கிப்பார்த்தனர். அதன் இயக்கமும் சரியாகவே இருந்தது. அதன் பின்னர் இக்குழு வள்ளக்கடவு வனப்பாதையை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம்
ஆய்வு முடிந்த பின் தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி அறிவியல் மையத்தில் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குழுவின் தலைவர் கூறுகையில், ''நீர்மட்டம் மிகக்குறைவாக இருப்பதால் அணையை ஆய்வு மட்டுமே செய்து வந்தோம். நீர்மட்டம் உயரும்போது அதன் பலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.