/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசின் பசுமை போர்வை திட்டம் செயல்படுத்துவதில் ஆர்வமில்லை; மரக்கன்றுகள் பராமரிப்பிற்கு வழங்கிய நிதி நிறுத்தம்
/
அரசின் பசுமை போர்வை திட்டம் செயல்படுத்துவதில் ஆர்வமில்லை; மரக்கன்றுகள் பராமரிப்பிற்கு வழங்கிய நிதி நிறுத்தம்
அரசின் பசுமை போர்வை திட்டம் செயல்படுத்துவதில் ஆர்வமில்லை; மரக்கன்றுகள் பராமரிப்பிற்கு வழங்கிய நிதி நிறுத்தம்
அரசின் பசுமை போர்வை திட்டம் செயல்படுத்துவதில் ஆர்வமில்லை; மரக்கன்றுகள் பராமரிப்பிற்கு வழங்கிய நிதி நிறுத்தம்
UPDATED : ஆக 25, 2025 06:34 AM
ADDED : ஆக 25, 2025 02:33 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு 2022ல் நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டத்தை அறிமுகம் செய்தது. இத் திட்டத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வளர்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2023 --2024 ல் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வட்டாரத்திற்கு 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 2024- -2025ம் நிதியாண்டிற்கு அந்த எண்ணிக்கை தடாலடியாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரு வட்டாரத்திற்கு 6500 மரக்கன்றுகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் என்பது 6500 ஆக குறைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களுக்கும் தேக்கு, பலா, குமிழ், மகாகனி, சவுக்கு, வேம்பு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இவற்றை வரப்பு ஓரங்கள், ஓடைகள், பாதை ஓரங்கள் என காலி இடங்களில் நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டது. விரும்பும் விவசாயிகளுக்கு ஆதார், சிட்டா, பாங்க் பாஸ்புக் முன்பக்கம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தனர்.
ஆனால் யாரும் இந்த பணியை ஆர்வமுடன் முன்னெடுக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் நடவு என்பது ஒரு சில வட்டாரங்களில் பெயரளவிற்கு நடந்தது. பெரும்பாலும் ஒன்றியங்களில் இப் பணியில் ஆர்வம் காட்டவில்லை.
மரக்கன்றுகள் எண்ணிக்கையை குறைத்தும், பராமரிப்பிற்கென ஒரு மரக் கன்றுக்கு ரூ.7 வீதம் வழங்கும் நிதியும் நிறுத்தியதால் விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்தது.
இதே நிலை நீடித்தால் நிலையான பசுமை போர்வை திட்டம் விரைவில் மூடுவிழா எதிர் நோக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில் , 'மரக்கன்றுகள் 20 ஆயிரம் என்ற இலக்கை குறைத்ததற்கு காரணம் விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை. பராமரிப்பு தொகையும் வழங்க வில்லை. வேளாண் அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை.
இத் திட்டம் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தினால் வெற்றிபெறும்,' என்கின்றனர். மரம் வளர்ப்பு திட்டம் நமது சந்ததியினருக்கானது. அதை நிறைவேற்ற வேளாண் இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.