ADDED : அக் 27, 2025 03:32 AM

மூணாறு: மூணாறில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரோட்டோரக் கடைகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி விசாரிக்கின்றனர்.
மூணாறில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து நுாற்றுக்கணக்கில் கடைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மூணாறு, மாட்டுபட்டி, ராஜமலைக்கு செல்லும் நுழைவு பகுதியான 5ம் மைல் ஆகிய பகுதிகளில் ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை மூன்று நாட்களுக்குள் அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். தாங்களே அகற்றாத நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினத் தொகை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எதிர்பார்ப்பு கடந்தாண்டு செப்.9ல் எம்.எல்.ஏ., ராஜா தலைமையில் நடந்த போக்குவரத்து ஆலோசனைக் குழு கூட்டத்தின் முடிவுபடி, மூணாறில் ரோட்டோரக் கடைகளை அகற்றும் பணி ஊராட்சி சார்பில் கடந்தாண்டு அக்டோபர் இறுதியில் துவங்கியது.
அதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது.
நோட்டீஸ் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, தேவிகுளம், லாக்காடு, கேப் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அதிகாரிகள் கடைகளில் கடந்த ஜூலையில் நோட்டீஸ் ஒட்டிய நிலையில், தொடர் நடவடிக்கை எதுவும் இல்லை. இந்நிலையில் தற்போது கடைகளை அகற்றுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், அவை அகற்றப்படுமா அல்லது வழக்கம் போல் கைவிடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

