/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுாதன முறையில் அலைபேசி திருடிய ஒடிசா வாலிபர் கைது
/
நுாதன முறையில் அலைபேசி திருடிய ஒடிசா வாலிபர் கைது
ADDED : டிச 22, 2024 08:19 AM
தேனி : ஆண்டிபட்டியில் நுாதன முறையில் அலைபேசி திருடிய ஒடிசா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் நீலமணி 49. அலைபேசி சர்வீஸ் செய்யும் தொழில் செய்கிறார்.இவர் டிச.19ல் மதியம் 3:00 மணிக்கு தேனி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு பில் கொடுத்தார்.
அப்போது அருகில் இருந்த ஹிந்தி பேசும் நபர், கீழே ரூ.20 கிடக்கிறது என, 'ஜாடை'யாக கூறினார். நீலமணி அந்த ரூபாயை எடுக்க கீழே குனிந்தார். அப்போது ஹிந்தி பேசும் வாலிபர், அலைபேசியை திருடி ஓடிவிட்டார். பின்னர் ஓட்டலில் இருந்த வீடியோ பதிவை, பதிவேற்றம் செய்து,தேனியில் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு நீலமணி அனுப்பினார். நண்பர் ஒருவர் ஏறிய பஸ்சில், சம்பந்தப்பட்ட வாலிபர் ஏறினார்.
அவரை நண்பர் ஒருவர் பிடித்து வைத்து, நீலமணிக்கு அலைபேசியில் அழைத்தார். ஆண்டிபட்டியில் இருந்து தேனி வந்த நீலமணி விசாரித்தார். அந்த வாலிபர், ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் முண்டுமால் பகுதியை சேர்ந்த ஆகாஷ்பதான் 20, என தெரியவந்தது. அவரை நீலமணி, ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகரிடம் ஒப்படைத்தார். எஸ்.ஐ., அவரை கைது செய்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை கைப்பற்றினர்.