அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் தொடரும் நிர்வாக சிக்கல்: மாணவர்கள் பாதிக்கும் அவலம்
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் தொடரும் நிர்வாக சிக்கல்: மாணவர்கள் பாதிக்கும் அவலம்
UPDATED : ஜூன் 20, 2026 05:33 PM
ADDED : ஜூன் 20, 2026 05:31 PM

தேனி:அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் நியமனத்தில் நிர்வாக சிக்கல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிகள் பாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில் மாதிரி மேல்நிலைப்பள்ளியாக அறிவித்தனர். சில பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்ப்பிக்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், அல்லிநகரம், சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேல்நிலைப்பள்ளிகள் இயக்குநர் கட்டுப்பாட்டில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் இல்லை இதனால் மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இதுவரை நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் உதவி பெறும் பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியைகளை ஆண்டு துவக்கத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் நியமிக்கின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமிருந்தால் கல்வி ஆண்டின் பாதியில் சென்று விடுவதால் மாதிரி பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தொடக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாதிரி பள்ளியில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டால் சீனியாரிட்டி பாதிக்கும் என்ற காரணத்தால் மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிய விரும்புவதில்லை. இந்த நிர்வாக சிக்கலுக்குபள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை இணைந்து நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
