ADDED : ஜூன் 28, 2025 12:50 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டபோதும், அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை.
இம்மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை.
நேற்று முன்தினம் காலை 8:00 நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 111.66 மி.மீ., பதிவான நிலையில் நேற்று காலை நிலவரப்படி 45.76 மி.மீட்டராக குறைந்தது.
தண்ணீர் சூழ்ந்தது: மலங்கரை அணையில் ஐந்து மதகுகள் திறக்கப்பட்டதால் தொடுபுழா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அதனால் தொடுபுழா நகர், சுற்றுபகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. தொடுபுழா நகரில் கேரள அரசு பஸ் டிப்போவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் வாகனங்கள் அகற்றப்பட்டன. நகரில் முஸ்லீம் பள்ளிவாசல், ஆனக்கூடு பகுதியில் ரோடு ஆகியவற்றை தண்ணீர் சூழ்ந்தது.
அதேபோல் தொடுபுழா அரிக்குழா பகுதியில் உள்ள பகவதியம்மன் கோயில் உட்பட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 28) கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.