/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
/
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூன் 04, 2025 01:36 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே மூளைச்சாவு அடைந்த நிருவி 33, என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் மதுரை, திருச்சி பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கண்டமனூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் 33.  இவரது மனைவி நிருவி 33. குழந்தை இல்லை.  நிருவியின் தாய் காளியம்மாள் கடந்த ஆண்டு இறந்தார். தனது தாய் இறந்த சோகத்தில் நிருவிக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டது.  இதற்கு கடமலைக்குண்டில் தனியார் மருத்துவமனையில் தொடர்சிகிச்சை பெற்றார்.
ஜூன் 1ல் அவருக்கு தலைவலி கடுமையாகி வீட்டில் மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிருவியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் தலையில் ரத்த குழாய் உடைப்பு ஏற்பட்டு ரத்தக்கசிவால் மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிருவியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது கண்கள்  மதுரையில் உள்ள மருத்துவமனைக்கும், இரு சிறுநீரகங்கள் திருச்சியில் உள்ள   மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

