/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கணக்கில் வரி வரவு வைப்பதால் ஊராட்சிகள் திணறல்
/
அரசு கணக்கில் வரி வரவு வைப்பதால் ஊராட்சிகள் திணறல்
அரசு கணக்கில் வரி வரவு வைப்பதால் ஊராட்சிகள் திணறல்
அரசு கணக்கில் வரி வரவு வைப்பதால் ஊராட்சிகள் திணறல்
ADDED : ஜன 20, 2024 05:31 AM
ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசு மாநில நிதிக்குழு மானியம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதியை கொண்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். ஊராட்சிகளுக்கு வழங்கிய நிதி குழு மானிய அளவை கடந்த சில ஆண்டுகளில் அரசு குறைத்துள்ளது. இதனால் பல குக்கிரமங்களை உள்ளடக்கிய ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.
ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரி, குடிநீர் வரி, பிளான் அப்ரூவல் வரி மூலம் கிடைக்கும் வருவாயை கடந்த காலங்களில் ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கு நேரடியாக பயன்படுத்தினர்.
இதனால் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிக்கான அவசர தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது. தற்போது ஊராட்சிகளின் வருவாயை நேரடியாக பயன்படுத்த அரசு அனுமதிக்கவில்லை. அரசின் குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் வரவு வைத்துள்ள தொகையை தேவையான நேரத்தில் ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்த முடியாது. அரசு மூலம் திரும்ப கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியாமல் நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.
மாநில நிதிக்குழு மானியம் குறைப்பு
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: மாநில நிதிக்குழு மானியம் கடந்த சில ஆண்டுகளாக பாதியாக குறைத்துள்ளது. இந்நிதியிலிருந்து தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம், பணியாளர்களின் ஓய்வு கால நிதி,ஈமக்கரியை நிதி வழங்க வேண்டும். குறைந்தளவு ஒதுக்கப்படும் நிதியால் எந்த பணிகளையும் முழுமையாக செய்ய முடியவில்லை. சில ஊராட்சிகளுக்கு கிடைக்கும் கனிமவள நிதியை பயன்படுத்தி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளை இணைத்து கிராம ஊராட்சிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கு துவக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் வரி வசூல் பணத்தை ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கில் தான் வரவு வைக்க வேண்டும்.
ஊராட்சிகளுக்கு சேர வேண்டிய இந்த நிதி அரசு மூலம் எப்போது திரும்ப கிடைக்கும் என்று கணிக்க முடியவில்லை.
ஊராட்சிக்கு வர வேண்டிய பணம் கணக்கில் இருந்தாலும் அவசரத்திற்கு எடுத்து பயன்படுத்த முடியாது. அரசு ஊராட்சிகளுக்கு எப்போது விடுவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் கிராம ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது என்றனர்.