ADDED : அக் 16, 2026 07:57 PM
கூடலுார்: இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூ., சார்பில் நடந்த பந்தில் குமுளியில் காரை தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒருவர் காயமடைந்தார்.
நேற்று காலை 6 மணிக்கு பந்த் துவங்கியது. குமுளி, தேக்கடி, ஜக்குபள்ளம், அனக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கேரள அரசு பஸ்கள் குறைந்தளவு இயங்கின. தனியார் பஸ்கள் இயக்கவில்லை. தேக்கடியில் படகு சவாரி வழக்கம்போல் இயங்கின.
நேற்று பகல் விர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் 1ம் மைலில் இருந்து குமுளிக்கு வந்தனர். குமுளியில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் வந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கார் கியரில் இருந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒட்டகத்தலமேடைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ராஜீவின் காலில் ஏறியதில் காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து காரில் வந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
