/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனைகளுக்கு மனநல டாக்டர் வராததால் பாதிப்பு: நோயாளிகளின் பெற்றோர்,உறவினர்கள் புலம்பல்
/
அரசு மருத்துவமனைகளுக்கு மனநல டாக்டர் வராததால் பாதிப்பு: நோயாளிகளின் பெற்றோர்,உறவினர்கள் புலம்பல்
அரசு மருத்துவமனைகளுக்கு மனநல டாக்டர் வராததால் பாதிப்பு: நோயாளிகளின் பெற்றோர்,உறவினர்கள் புலம்பல்
அரசு மருத்துவமனைகளுக்கு மனநல டாக்டர் வராததால் பாதிப்பு: நோயாளிகளின் பெற்றோர்,உறவினர்கள் புலம்பல்
ADDED : பிப் 01, 2025 05:39 AM
கம்பம்: கம்பம், உத்தமபளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளுக்கு மனநல டாக்டர் வராததால் மனநலம் பாதித்துள்ளவர்களின் பெற்றோர், உறவினர்கள் புலம்பி வருகின்றனர்.
சமூக ஏற்றத் தாழ்வுகள், பொருளாதாரம், குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் சிலரின் மனநலம் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு பாரம்பரியமாக மனநல பிரச்னை வரலாம் என மருத்துவ துறையினர் கூறியுள்ளனர்.
தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மன நல சிறப்புபிரிவுகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் இதற்கென சிகிச்சை பிரிவுகள் தனியாக இல்லை. மாநில அளவில் மனநல சிறப்பு டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் அரசு மருத்துவமனைகளில் இல்லை.
மாவட்டத்தில் பெரியகுளம் மாவட்ட மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களின் சிகிச்சை பிரிவும், மனநல டாக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மனநல டாக்டர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை விசிட் செய்து, அங்கு வரும் மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி செல்வது வழக்கம். கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளுக்கு சராசரியாக தலா 100 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
சமீப காலமாக மனநல டாக்டர் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மருத்துவமனைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மனநலம் பாதித்தவரின் பெற்றோர் கூறுகையில், டாக்டருக்கு பதில் அவருடைய உதவியாளர் வந்து மருந்து மாத்திரைகளை வழங்கி செல்கின்றனர். மனநலம் பாதித்தவரின் நிலை என்ன என்பதை டாக்டர் நேரில் பரிசோதித்தால் தான் சிகிச்சை முறையாக இருக்கும். ஆனால் பெயரளவிற்கு மருந்து மாத்திரைகளை மட்டும் வழங்கி செல்கின்றனர். மனநலம் பாதித்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை உணர்ந்து டாக்டர் மருத்துவமனைகளுக்கு 15நாட்களுக்கு ஒருமுறை வந்தால் பயன்உள்ளதாக இருக்கும், என புலம்புகின்றார்.
இணை இயக்குநர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மன நல சிறப்பு டாக்டர் நியமனம் செய்ய அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்டத்தில் குறைந்தது 1000 முதல் 1500 பேர்கள் வரை மனநலம் பாதித்தவர்கள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.