/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு: மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
/
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு: மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு: மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
மூன்றாவது மொழியை கற்பது முத்தான வாய்ப்பு: மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு பெற்றோர் வரவேற்பு
ADDED : பிப் 21, 2025 05:59 AM

மத்திய அரசு வழங்கிய மத்தான வாய்ப்பு
-ஜெயசுதா
குடும்பத்தலைவி, தேனி
நமது தொழில்,வியாபார வளர்ச்சிக்கு தொடர்பு திறன் முக்கியம். தொடர்பு திறன் அதிகரித்து கொண்டால் வியாபாரத்தில் வெற்றி அடைந்து பணம் சம்பாதிக்கவும் முடியும். அதனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்விகொள்கையை ஆதரிக்கிறேன்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹிந்தி திணிப்பு இல்லை. 23 மொழிகளில் எந்த மொழியையும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இது ஹிந்தி எதிர்ப்பு என இதுவரை நம்மை ஏமாற்றிய ஆட்சியாளர்கள் மத்தியில் இது மத்திய அரசு வழங்கிய மகத்தான வாய்ப்பு.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதே.
தமிழக அரசு அரசியல் லாபம்ஈட்ட, இதனை அரசியல் ஆக்குகிறது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பல மொழி பேசுவது சந்தோஷம்
-அனுசியா
குடும்பத்தலைவி, கூடலுார்
குழந்தைகள் பல மொழிகளில் பேசும்போது அதை பார்த்து முதலில் சந்தோஷப்படுவது பெற்றோர்கள்தான். தமிழ் மொழி கட்டாயம். அதேபோல் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எந்த மொழி தேவையோ அதை கற்றுக் கொள்வதில் எவ்வித தடையையும் செய்ய கூடாது. எனது குழந்தை தேனி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவில் படித்த போது மலையாளம், தமிழ் மற்றும் மூன்றாவது மொழியாக ஹிந்தியை படித்தது. கேரளாவில் இருந்து மாற்றி தற்போது தமிழகத்தில் படிக்க வைத்துள்ள நிலையில் கல்விமுறை மாற்றம் சிரமத்தை தந்துள்ளது. தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் போது தமிழகத்தில் மட்டும் அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் எங்களைப் போன்ற நடுத்தர மக்களை பாதிக்கச் செய்துள்ளது.
தமிழுக்கு பின்னடைவு ஏற்படாது
-சிவ செல்லப்பா
பெற்றோர், கம்பம்
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது ஒரு மொழியை படிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஹிந்தி படிக்க வேண்டும் என்று கூறவில்லை. சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் பட்டியலில் உள்ளது. ஹிந்தி கற்பதால் தவறில்லை. அதனால் தமிழுக்கு பின்னடைவு ஏற்படாது. தமிழ் இலக்கணம், இலக்கியம் செறிந்த மொழி. தமிழ் மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ், ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக் கொள்வது தவறில்லை. அந்த மொழியின் இலக்கியங்களை தெரிந்து கொள்ள முடியும். மூன்றாவது மொழி ஹிந்தி மட்டும் என்றில்லை. மலையாளமாக கூட இருக்கலாம். எனவே மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது தேவையானதே.
அறிவு தேன் கூட்டில் கல் வீச வேண்டாம்
-ஜனனி
குடும்பத்தலைவி, பெரியகுளம்
'கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பது போல ஹிந்தி தெரிந்தால் பல துறைகளிலும் சாதிக்கலாம். மூன்றாவது மொழியாக ஹிந்தி படித்தால் பிற மாநிலங்களில் கல்வி, வேலை வாய்ப்பு, வணிகத்தில் வெற்றி பெறலாம். எனது பிள்ளையை சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர்த்துள்ளேன்.
தற்போது ஹிந்தி படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பயிற்சி நிலையங்களை மாணவர்கள் தேடிச் செல்கின்றனர். அரசு பள்ளிகளில் ஹிந்தி கற்று தந்தால் மாணவர்கள் கல்வி தரம் உயரும்.
அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கொள்கைகளை கல்வியில் திணிக்கின்றனர். 'அறிவு எனும் தேன் கூட்டில் அரசியல் எனும் கல்லை தூக்கி வீச வேண்டாம். சுதந்திர நாட்டில் ஹிந்தி மொழி கற்பது அவரவர் விருப்பம். இதை தடுக்க கூடாது, மூன்றாவது மொழி கற்பதை ஆதரிக்க வேண்டும்.--
மத்திய அரசு மூலம் கிடைக்கும் வாய்ப்பு
---ராமச்சந்திரன்
பெற்றோர், ஆண்டிபட்டி
தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழி படிப்பதில் தவறு ஏதுமில்லை. மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு இது. மாணவர்களுக்கு கூடுதல் தகுதியை வளர்க்க உதவும்.
தமிழகத்தை விட்டு வெளியே சென்றால் ஹிந்தி பேசுபவர்களே அதிகம் உள்ளனர். ஹிந்தியை படிக்க விடாமல் இதுவரை நம்மை முட்டாளாக்கி விட்டனர். மூன்றாவது மொழி படிக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். அரசியல்வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக மாணவர்களையும், மக்களையும் ஏமாற்றுகின்றனர்.
ஹிந்தி எதிர்ப்பு மக்கள் மனதில் இல்லை. மத்திய அரசு பணி, ராணுவம் தொடர்பான பணிகளுக்கு ஹிந்தி அவசியமாகிறது. அதை தெரிந்து கொள்வதால் எந்த தவறும் இல்லை. மூன்றாவது மொழியில் அடிப்படையை தெரிந்துகொண்டாலே பயன் தரும்.