/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி மலைப்பாதையில் ஏற முடியாமல் பாதியில் நின்ற தமிழக அரசு பஸ் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்
/
குமுளி மலைப்பாதையில் ஏற முடியாமல் பாதியில் நின்ற தமிழக அரசு பஸ் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்
குமுளி மலைப்பாதையில் ஏற முடியாமல் பாதியில் நின்ற தமிழக அரசு பஸ் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்
குமுளி மலைப்பாதையில் ஏற முடியாமல் பாதியில் நின்ற தமிழக அரசு பஸ் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்
ADDED : செப் 05, 2025 12:52 AM

கூடலுார்:குமுளி மலைப்பாதையில் நேற்று காலை திணறிக் கொண்டு ஏறிய தமிழக அரசு பஸ் பாதி வழியில் நின்றது. விபத்து தவிர்க்கப்பட்டதால் நிம்மதி அடைந்த பயணிகள் மாற்று பஸ்சில் சென்றனர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. தேனி மாவட்ட எல்லையான லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார ரோடு தமிழக வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள மலைப்பாதையாகும். கொண்டை ஊசி வளைவு, இரைச்சல் பாலம் வளைவு, மாதா கோயில் வளைவு, வழிவிடும் முருகன் கோயில் வளைவு உள்ளிட்ட பல ஆபத்தான வளைவுகள் உள்ளன. இரு மாநில எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். சபரிமலை உற்ஸவ காலங்களில் அதிகமான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் இவ்வழியாகச் செல்லும்.
நேற்று காலை தேனியில் இருந்து குமுளி நோக்கி பெரியகுளம் டெப்போவைச் சேர்ந்த தமிழக அரசு பஸ் (டி.என்.57 என். 2467)சென்றது. லோயர்கேம்ப் மலைப்பாதையில் ஏறும்போதே திணறிக் கொண்டு ஏறிய பஸ் மூன்றாவது கி.மீ.,ல் உள்ள கொண்டை ஊசி வளைவில் ஏற முடியாமல் நின்றது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஏற முடியாமல் பின்னோக்கிச் சென்று மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் பஸ் நின்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். அனைவரையும் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பினர்.
2024 மே 13ல் குமுளியில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி வந்த அரசு பஸ் (டி.என்.57 என். 2217) பிரேக் பிடிக்காமல் பாறையில் மோதி நின்றதால் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. இதனால் 68 பயணிகள் உயிர் தப்பினர். அதே ஆண்டு மே 9ல் அரசு பஸ் (டி.என்.57 என். 1995) ஆக்சில் கட் ஆகி பாதி வழியில் நின்றது. 2025 ஏப்.24ல் குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசு பஸ் பிரேக் பிடிக்காமல் மாதா கோயில் வளைவு அருகே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் மோதி நின்றது அப்போதும் 50க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.
தொடர்ந்து குமுளி மலைப்பாதையில் அரசு பஸ் பழுது ஏற்படுவதால் அச்சத்துடன் பயணிகள் பயணித்து வருகின்றனர். ஆபத்து நிறைந்த குமுளி மலைப்பாதையில் டப்பா பஸ்களை தவிர்த்து புதிய பஸ்களை இயக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.