/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அவசியம்
/
டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அவசியம்
டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அவசியம்
டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிரமம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அவசியம்
ADDED : ஜூலை 20, 2025 05:04 AM

சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், பணியாளர்கள் இன்றி மருத்துவ சேவை குறைந்ததால் ஏழை, எளிய நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சின்னமனுாரில் 54 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனையை நம்பி சின்னமனூர், குச்சனூர், மார்க்கையன்கோட்டை, கூளையனுார், முத்துலாபுரம், சீப்பாலக்கோட்டை, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், ஒடைப்பட்டி, அப்பிபட்டி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களும், மேகமலை, மணலாறு உள்ளிட்ட மலைக்கிராமங்களும் உள்ளன.
தினமும் 600 க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இம் மருத்துவமனையில் தேவைக்கு ஏற்ப டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் இல்லை. பராமரிப்பு இன்றி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டியுள்ளது.
உட்கட்டமைப்பு வசதி இல்லை
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லை. பிரசவ வார்டில் ஒரு பெண் டாக்டர் உள்ளார். அவரும் பெரியகுளத்திற்கும் மாற்றுப் பணிக்கு சென்று தற்போது திரும்ப வந்துள்ளார். அவசரத்திற்கு கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வந்தால், தேனி அல்லது கம்பம் மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. மாதம் ஒன்றிரண்டு பிரசவம் நடக்குமா என்பது சந்தேகமே. அதிலும் சிசேரியன் கேஸ் வந்தால் உடனே மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி விடுகின்றனர்.
இதற்கு காரணம் உரிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. மருந்து மாத்திரை கொடுக்க கூட உத்தமபாளையத்தில் இருந்து மாற்றுப் பணியாக மருந்தாளுனர் வருகிறார். ஆய்வத்திலும் இதே நிலை தான். அறுவை சிகிச்சை அத்தி பூத்தாற் போல நடக்கும்.
நோயாளிகள் வருகை குறைவு
கொரோனா காலத்தில் கட்டிய காய்ச்சல் பிரிவு கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. சமீபத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் வேறு பயன்பாட்டிற்கு உள்ளது. மருத்துவமனை முழுவதும் மின் வயரிங் பழுதடைந்துள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
மருத்துவமனையின் சேவை குறைபாட்டை பார்த்து நோயாளிகள் எண்ணிக்கை சரிந்து விட்டது. ஒன்றிரண்டு பேர்களே தங்கி சிகிச்சை பெறுவதால் உள்நோயாளிகள் பிரிவும் மூடுவிழா நிலையில் உள்ளது.
கர்ப்பிணிகள் வருவது இல்லை
திருநாவுக்கரசு, ஓய்வு ஆசிரியர், சின்னமனுார்: சின்னமனூரில் அரசு மருத்துவமனை பெயரளவிற்கு உள்ளது. போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள் இல்லாதது, வசதிகள் இல்லாததை பார்த்து நோயாளிகள் வருகை குறைந்து விட்டது. பிரசவத்திற்கு பெண்கள் வருவதை தவிர்த்து விட்டனர்.
இரவில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களின் கதி பரிதாபமாக இருக்கும். ஒன்றிரண்டு உள்நோயாளிகளுக்கும் இரவில் பாதுகாப்பு இல்லை. கூடுதல் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
மருத்துவ சேவை முடக்கம்
சிங்காரவேலன் , வழக்கறிஞர், சின்னமனூர் : சின்னமனூர் மருத்துவமனையில் எந்த நவீன வசதிகளும் இல்லை. சுற்றியுள்ள கிராமங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இங்கு டாக்டர்கள், படுக்கைகள், நவீன லேப், எக்ஸ்ரே, பிரசவ பிரிவு, அதற்குரிய பெண் டாக்டர்கள் என எதுவும் இல்லை. எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் கட்டிய அவசர சிகிச்சை பிரிவு, என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்படவில்லை. போதிய இட வசதி உள்ளது. மருத்துவ சேவை முடங்கி வருவதால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
அரசுக்கு பரிந்துரை
மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், 'இங்கு ஒரு மருத்துவ அலுவலர் உள்பட 6 டாக்டர்கள் உள்ளனர். இருப்பவர்களை வைத்து முடிந்தளவு சிகிச்சைகள் தரப்படுகிறது.
பெண் டாக்டர் நியமனம் செய்யப்பட்டு விட்டார். இனி பிரசவங்கள் நடைபெறும். தேவையான வசதிகள் குறித்து அரசிற்கு எழுதி உள்ளோம். அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது,' என்றனர்.

