200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.,கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
200 ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.,கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி
UPDATED : நவ 20, 2026 05:48 PM
ADDED : நவ 20, 2026 05:46 PM
தேனி: மாவட்டத்தில் 200 ரேஷன்கடைகளில் கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தம் வசதிக்கு ஏற்பாடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
ரேஷன்கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண அலைபேசி பயன்படுத்தி கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி சில ஆண்டுகளுக்கு முன் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட இந்த பணி சில மாதங்களிலேயே முடங்கியது. தேனி மாவட்டத்தில் ஒரு சில கடைகளில் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டன. ஆனால், கியூ.ஆர்., கோடு வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு சேவை கட்டணம் வழங்கும் நடைமுறையால் இந்த திட்டம் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரை
கூட்டுறவுத்துறை அதிகாரி கூறுகையில், ‘ரேஷன் கடைகளில் கியூ.ஆர்., கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 200 முழு நேர கடைகளில் இந்த முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த கடைகளுக்கு கியூ.ஆர்., கோடு வழங்க மதுரை மத்திய கூட்டுறவு வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளளோம். ஒரே சங்கத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு வழங்கப்படும் கியூ.ஆர்., கோடுகள் எண்களை வைத்து எந்த கடையில் எவ்வளவு தொகை வந்துள்ளது என அறிந்து கொள்ள முடியும்,’ என்றனர்.
