/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
/
பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
ADDED : ஜன 14, 2024 11:47 PM

தேனி : தை முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக நேற்று தேனியில் செங்கரும்பு, மஞ்சள், கூரைப்பூ, மண் பானை ஆகியவற்றை பொது மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். செங்கரும்புகள் சின்னமனுார், தேவதானப்பட்டி பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கட்டு, கட்டாக வந்திருந்தன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது.
வியாபாரி ரமேஷ் கூறுகையில், 'கடந்தாண்டை விட இந்தாண்டு கொள்முதல் விலை ரூ.20 முதல் ரூ. 40 வரை அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனை விலையும் சற்று கூடி உள்ளது', என்றார். மஞ்சள் கொத்து ஜோடி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகின. மதுரை ரோட்டில் மண் பானைகளை மக்கள் ஆர்வமாக வாங்கினர். வியாபாரி முத்துவேல் பாண்டி கூறுகையில், 'பொங்கல் பானை ரூ.100 முதல் ரூ.600 வரை விற்பனை யாகிறது. மண் கிடைக்காததால் பானை தயாரிப்பு குறைந்து வருகிறது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இந்தாண்டு உரியடிக்கு பயன்படுத்தும் பானை அதிக அளவில் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கிச் சென்றனர்', என்றார்.