/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
139 அடியை கடந்த பெரியாறு அணை நீர்மட்டம்; கேரள பகுதிக்கு நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 'ரூல்கர்வ்' நடைமுறையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : அக் 20, 2025 01:00 AM
கூடலுார்: ''முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடியை கடந்ததால் கேரள பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டது. இதனால் வீணாக கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீரை தடுக்க 'ரூல்கர்வ்' நடைமுறையை நீக்க வேண்டும்'' என, தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் அக்.17 இரவில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 60 ஆண்டுகளுக்குப் பின் 71 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் ஆறு அடிக்கு மேல் உயர்ந்தது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் மழை இன்றி வெப்பம் நிலவியது. மீண்டும் இரவில் மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 892 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. நீர் இருப்பு 6962 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்மட்டம் 139.35 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 6.6 மி.மீ., தேக்கடியில் 26.4 மி.மீ., மழை பதிவானது.
'ரூல்கர்வ்' (நீர்மட்ட கால அட்டவணை) விதிமுறைப்படி தற்போது அணையின் நீர்மட்டம் 137.75 அடியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் 139 அடியை கடந்ததால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வந்த நீர் தற்போது 10,178 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
'ரூல்கர்வ்' நீக்க வலியுறுத்தல் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: 'ரூல்கர்வ்' நடைமுறையால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிநீர் தேக்க முடியவில்லை. கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்த போதிலும் கேரளாவிற்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டு நீர்மட்டத்தை உயர்த்துவதை தடுக்கின்றனர். இதற்கு கேரள அரசியல்வாதிகள் பல்வேறு நாடகங்களையும் நடத்துகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றால் அணையில் 'ரூல்கர்வ்' நடைமுறையை நீக்க வேண்டும் என்றார்.