/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம் - 2ம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்
/
மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம் - 2ம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்
மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம் - 2ம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்
மழையின்றி குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம் - 2ம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்
ADDED : நவ 20, 2024 02:29 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் 122.65 அடியாக குறைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறப்பை குறைக்காததால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அறுவடை முடிந்து தற்போது இரண்டாம் போக சாகுபடிக்காக நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன.
நேற்று காலை 6:00 மணிப்படி நீர்மட்டம் 122.65 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்வரத்து வினாடிக்கு 486 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு 1033 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தேக்கடியில் மட்டும் 1.8 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 3153 மில்லியன் கன அடியாகும். வடகிழக்கு பருவமழை நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரமடையாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
செப்.14 ல் அணையின் நீர்மட்டம் 132 அடியாக இருந்தது. அந்த நேரத்தில் வைகை அணையிலும் நீர்மட்டம் 57.25 அடி என திருப்திகரமாக இருந்தது. அப்போது பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பை 1511 கன அடியாக அதிகரித்திருந்தனர். நீர்த்திறப்பை அதிகரித்திருக்காமல் அணையில் நீரை தேக்கி வைத்திருந்தால் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்காது. சில நாட்களாக நெல் நாற்றுகள் வளர்த்து வரும் விவசாயிகள் அனைவரும் நீர் திறப்பை 1100 கன அடியில் இருந்து 600 ஆக குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் பெயரளவிற்கு குறைத்து 1033 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.