/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 7 அடி உயர்வு
/
பெரியாறு அணை நீர்மட்டம் 2 நாட்களில் 7 அடி உயர்வு
ADDED : மே 29, 2025 12:35 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் மட்டம் இரண்டு நாட்களில் 7 அடி உயர்ந்தது. நெல் சாகுபடிக்காக தண்ணீர் பற்றாக்குறை நீங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மே 23ல் துவங்கியது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் ஐந்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 7735 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீருக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் 7 அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 122.75 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).
நேற்று பகல் முழுவதும் அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.
லோயர்கேம்ப், கூடலுார், கம்பம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் லோயர்கேம்பில் துவங்கும் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோரத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் கலங்கலாக வரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் கிடைக்கிறது. சில மாதங்களாக நிலவிய வெப்பத்தால் ஆறுகள் வறண்டு கிடந்தன.
குடிநீருக்காக பெரியாறு அணையில் திறக்கப்படும் 100 கனஅடி நீரில் சில கன அடிகள் மட்டுமே வைகை அணை வந்து சேர்கிறது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் கொட்டக்குடி ஆறு மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. மே 26ல் வினாடிக்கு 34 கன அடியாக இருந்த வைகை அணைக்கான நீர்வரத்து மே 27ல் வினாடிக்கு 426 கன அடியாகவும், நேற்று வினாடிக்கு 507 கன அடியாகவும் உயர்ந்தது.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு ஏதும் இல்லை. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.