ADDED : செப் 28, 2024 05:43 AM

மூணாறு, : ஐ.என்.டி.யு.சி. தென்னிந்திய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர், உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதிபதி கிருஷ்ணன்நாயர் கமிஷன் அறிக்கையின்படி இரண்டு வீடுகள், தரமான மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். பி.எல்.சி.யில் ஊதிய ஒப்பந்தத்துடன் இதர பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். வன விலங்குகள் தாக்குதலில் இருந்து தொழிலாளர்கள், உடமைகள், கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் உள்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
பொது செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். தலைவர் மணி துவக்கி வைத்தார். பொருளாளர் கருப்பசாமி, இணைச் செயலாளர் ஜெயராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் விஜயகுமார், ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், மூணாறு ஊராட்சி துணை தலைவர் பாலசந்திரன் உள்பட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.