ADDED : பிப் 07, 2024 12:36 AM
கடமலைக்குண்டு : வருஷநாடு அருகே தும்மக்குண்டுவை சேர்ந்த புயல்மன்னன்,- தனலட்சுமி தம்பதியரின் மகன் கவிப்பிரியன் 17, கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். கவிப்பிரியன் கரட்டுப்பட்டி அரசு கள்ளர் விடுதியில் தங்கி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
அதே பள்ளியில், விடுதியில் தங்கி அவரது தம்பி ஸ்ரீபிரியன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் விடுதியில் இருந்து வீட்டிற்கு சென்றனர்.
விடுமுறை முடிந்து பிப்ரவரி 5ல் பள்ளி சீருடையுடன் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அன்று மாலை கவிப்பிரியன் பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது தந்தை கவிப்பிரியனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மலைப்பகுதியில் உள்ள மரத்தில் பள்ளி சீருடையுடன் கவிப்பிரியன் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதாக தகவல் தெரிந்தது.
கடமலைக்குண்டு போலீசார் கவிப்பிரியன் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

