ADDED : நவ 18, 2024 07:02 AM
ரேஷன்கடை விற்பனையாளருக்கு கத்திக்குத்து
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி புதுத்தெரு ரமேஷ் 28. ஜெயமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவருக்கும் சில்வார்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துமணிக்கும் 31, முன் விரோதம் இருந்தது. தண்ணீர் பந்தல் அருகே ரமேஷ், நண்பர் பாண்டியராஜனுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களை மறித்த முத்துமணி, கத்தியால் ரமேஷை குத்தினார். தடுக்க வந்த பாண்டியராஜனுக்கும் கத்தி குத்து விழுந்தது. இருவரும் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் முத்துமணியை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் தகராறு செய்வதவர் கைது
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஏ.வாடிப்பட்டி நடுத்தெரு காமராஜ் 52. அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன் 36. இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்தது. காமராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் கண்ணப்பன், காமராஜின் மனைவி சாந்தியை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் போலீசார் கண்ணப்பனை கைது செய்தனர்.
டூவீலர் திருட்டு
போடி: போடி புதுார் கோட்டை கருப்பசாமி கோயில் தெரு செல்லப் பாண்டி 21. லோடுமேன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு துாங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. போடி டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, டூவீலரை தேடி வருகின்றனர்.
புகையிலை பதுக்கியவர் கைது
போடி: டி.வி.கே.கே., நகர் சையது உசேன் 28. இவர் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை அம்மாகுளம் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக தான் வைத்திருந்த பையில் பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் அவரை நேற்று கைது செய்து, 38 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
மன அழுத்தத்தில் தற்கொலை
போடி: திருமலாபுரம் செந்தில் விநாயகர் கோயில் தெரு பிரபாகரன் 33. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக வெளி நபர்களிடம் அதிகமாக கடன் வாங்கினார். கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
காட்டு மாடு தாக்கி பெண் தொழிலாளி காயம்
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான தென்மலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் ஒன்றாம் எண் தேயிலை தோட்டத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென வந்த காட்டு மாடு தொழிலாளி மீனாவை 45, கொம்பால் குத்தி துாக்கி வீசியது. உடனிருந்த சக பெண் தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தினுள் பதுங்கி உயிர் தப்பினர். பலத்த காயமடைந்த மீனா மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு கோலாஞ்சேரி கொண்டு செல்லப்பட்டார்.
--தகராறு: 6 பேர் மீது வழக்கு
தேனி: பெரியகுளம் லட்சுமிபுரம் ராஜாஜி தெரு லோகரட்சகன் 62. இவர் தோட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டிருந்தார். அங்கு வந்த மதுராபுரி வெங்கிடசாமி, மகாலட்சுமி, ராஜேஸ்குமார், இவரது மனைவி வந்தனர். வந்தவர்கள் லோகரட்சகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். லோகரட்சகன் புகாரில் 4 பேர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர். நால்வரையும் லோகரட்சகன், அவரது சகோதரர் பரசுராம் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக ராஜேஸ்குமார் புகார் அளித்தார். இருவர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ டிரைவர் கைது
தேனி: பொம்மைய கவுண்டன்பட்டி ஓம்சக்தி கோயில் தெரு வேல்ராஜ் 38. கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதியில் நின்றிருந்த போது முத்தால் தெரு சுந்தர் 36, ஆட்டோவில் வந்து வேல்ராஜிடம் தகாத வார்த்தைகளால் திட்டினர். கோபமடைந்த வேல்ராஜ், ஆட்டோ டிரைவர் சுந்தரை அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த வேல்ராஜ் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து வேல்ராஜ் முதுகில் வெட்டினார். காயமடைந்தவரை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வேல்ராஜ் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.