மாமனாரை கத்தியால் குத்தியவர் கைது
பெரியகுளம்: கைலாசபட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் 53. இவரது மூன்றாவது மகள் மாலதி 24.க்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகை பாண்டிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இருவருக்கும் இடையே பிரச்னை காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மாலதி தனது பெற்றோர் வீட்டில் உள்ளார். இந்நிலையில் கார்த்திகைபாண்டி, மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை அழைத்துள்ளார். மாலதி செல்ல மறுத்துள்ளார். இதனால் கார்த்திகைபாண்டி, இவரது உறவினர்கள்
விஜய், கோச்சடையான், முத்துப்பாண்டி ஆகியோர் முருகன் இவரது மனைவி மலையம்மாளை அவதூறாக பேசி, கார்த்திகை பாண்டி கத்தியால் முருகனை குத்தினர். மற்றவர்கள் கம்பால் அடித்து காயப்படுத்தினர். தென்கரை போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, கார்த்திகை பாண்டியை கைது செய்தனர்.
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போடி: கொக்கயர்பள்ளி பின்புறத்தில் வசிப்பவர் சுவேதா 24. இவரது கணவர் வசந்தகுமார் 30. சென்னையில் பணிபுரிந்து வருகிறார். ஒரு குழந்தை உள்ளது. சுவேதா வீட்டில் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அருகே குடியிருக்கும் இளந்தமிழன் 40, சுவேதா வீட்டிற்குள் நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். சத்தம் போடவும் அருகே வசித்தவர்கள் வந்தவுடன், அடுத்த முறை வரும் போது உன்னை முடிக்காமல் விடமாட்டேன். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். சுவேதா புகாரில் போடி டவுன் போலீசார் இளந்தமிழனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
முதியவர் கைது
பெரியகுளம்: தென்கரை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னகாளை 75. இவர் 15 மது பாட்டில்களை திருவள்ளுவர் சிலை அருகே விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை போலீசார் சின்னகாளையை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினார்.
ஸ்கேன் சென்டரில் தகராறு செய்தவர் மீது வழக்கு
கம்பம்:,கம்பம் : கம்பமெட்டு காலனியை சேர்ந்த இப்ராகிம் மகன் நாகூர்கனி, இவர் தனது மனைவி முசோலினியை அழைத்து கொண்டு ஸ்கேன் பார்ப்பதற்காக இங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த ஆண் டாக்டர், ஸ்கேன் செய்துள்ளார். உடனே நாகூர்கனி, தனது மனைவிக்கு ஆண் டாக்டர் எப்படி ஸ்கேன் எடுக்கலாம் என்று, கேட்டு பணியில் இருந்த டாக்டர்களையும், பணியாளர்களையும் அவதூறாக பேசி மிரட்டியுள்ளார் . இது தொடர்பாக ஸ்கேன் நிர்வாகம் தெற்கு போலீசில் புகார் செய்தது. கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். நாகூர்கனி சார்பில் கொடுத்த புகாருக்கு மனு ரசீது வழங்கினர்.-