மனைவி துாக்கிட்டு தற்கொலை
தேனி: போடி பத்ரகாளிபுரம் வடக்குத்தெரு விருமாண்டி 34. இவரது மனைவி நிவேதா 30. இரு பிள்ளைகள் உள்ளனர். பூப்பாறையில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் ஊரில் ஒத்திக்கு வீடு எடுத்து தங்கினர். கடன் அதிகமானதால், கணவர் ஆறுதல் கூறி வந்த நிலையிலும் மனைவி விரக்தியாக பேசியுள்ளார். நேற்று கணவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்க, சமையலறையில் நிவேதா துாக்கிட்டார். மயங்கிய நிலையில் இருந்த மனைவியின் உடலை கணவர் மீட்டு டொம்புச்சேரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், உயிரிழந்ததாக தெரிவித்தார். பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியால் குத்தியவர் கைது
தேனி: தேனி உப்புக்கோட்டை மோகன் 29. தனியார் பஸ் நிறுவன ஊழியர். அதேப்பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் 27. இருவரும் டொம்புச்சேரியில் உள்ள மதுபாருக்கு சென்றனர். மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன், மனோஜ்குமாரை மதுபாட்டிலால் தாக்கினார். மனோஜ் கத்தியால் மோகனை குத்தினார்.
இதில் காயமடைந்த மோகன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மனோஜ்குமார் மீது வழக்குப்பதிந்த தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் மனோஜ்குமாரை கைது செய்தனர்.
மதுபாட்டில் பதுக்கியவர் கைது
தேனி: தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெரு ஜெயவீரன் 54. இவர் அங்குள்ள ராணிமங்கம்மாள் சாலை டாஸ்மாக் கடை அருகே 20 மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கினார். இவரை கைது செய்து கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் கஞ்சா கடத்திய மூவர் கைது
தேனி: உத்தமபாளையம் பூசாரிகவுண்டன்பட்டி அஜித்குமார் 25, எரசக்கநாயக்கனுார் கிருஷ்ணன் கோயில் தெரு யுவராஜா 21. இருவரும் கம்பம் கோம்பை ரோடு மணிகண்டனிடம் 26, கூலி வேலை செய்தனர். நேற்று யுவராஜாவின் டூவீலரில் மணிகண்டன் வழங்கிய ஒரு கிலோ 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை சாக்குப்பையில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்தார்.
டூவீலரில் கோகிலாபுரம் அருகே சென்றபோது, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்.ஐ., முருகானந்திடம் இருவரும் சிக்கினர். அவர்களிடம் இருந்த கஞ்சா, டூவீலரை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர். பின் இருவரின் வாக்குமூலத்தில் ஆனைமலையான்பட்டி மணிகண்டனை கைது செய்தனர். அவரின் டூவீலர் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட 3 கிலோ 100 கிராம் கஞ்சாவின் மதிப்பு ரூ.31 ஆயிரம் ஆகும். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் நால்வர் மீது வழக்குப்பதிந்து, தலைமறைவான அசோக்குமாரை தேடி வருகின்றனர்.
மூதாட்டி பலி
தேனி: கூடலுார் ரெங்கப்பக் கவுடர் தெரு கோமதி 65. இவர் பிப்., 6ல் கழிப்பறையில் வழுக்கி விழுந்து பின் தலையில் காயம் ஏற்பட்டது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.