கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேனி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., தவசிராஜன் தலைமையிலான போலீசார் ஆண்டிபட்டி கொண்டம நாயக்கன்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் வந்த ஜம்புலிப்புத்துார் காளியம்மன் கோயில் தெரு செந்தில்நாதனை விசாரித்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து, கஞ்சா, டூவீலரை கைப்பற்றினர். போலீசாரிடம் ஆண்டிபட்டி அணைக்கரைப்பட்டி பாபுவிடமிருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி சென்றதாக தெரிவித்தார். பாபு மீதும் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்
டூவீலர் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
தேவதானப்பட்டி: எருமலைநாயக்கன்பட்டி தினேஷ்குமார் 28. நிலக்கோட்டையில் உள்ள கடையில் பணிபுரிந்தார். எருமலைநாயக்கன்பட்டியில் பெற்றோரை பார்க்க டூவீலரில் தேனி - திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் சென்றார். தேவதானப்பட்டி பால்பண்ணைப் பிரிவில் திரும்பியபோது எதிரே திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் 40, ஓட்டிய அரசு பஸ், டூவீலரில் மோதியது. தினேஷ்குமார் சம்பவ இடத்தில் பலியானார். தேவதானப்பட்டி போலீசார் பஸ் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.
துாங்கிய லாரி டிரைவர் இறப்பு
தேவதானப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேல சின்னம்பட்டியைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கருப்பணன் 63. மதுரையில் இருந்து தேனிக்கு லாரியை ஓட்டிச் சென்றார். காட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் முன் லாரியை நிறுத்தி விட்டு, கீழே துாங்கியுள்ளார். கருப்பணன் அலைபேசிக்கு அழைப்பு வந்தும் எடுக்கவில்லை. அவரை பரிசோதித்த பார்த்ததில் இறந்து கிடந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராவல் மண் திருடியவர் கைது
தேவதானப்பட்டி: வடக்கு தெரு பிரகாஷ் 44. பெரியகுளம் வத்தலக்குண்டு ரோடு தேவதானப்பட்டி அருகே அரசு அனுமதி சீட்டு இல்லாமல் இரண்டரை யூனிட் கிராவல் மண்ணை திருடி டிப்பர் லாரியில் எடுத்துச் சென்றார். பெரியகுளம் மண்டல துணை தாசில்தார் சதீஷ் புகாரில், தேவதானப்பட்டி போலீசார் பிரகாஷை கைது செய்து, மண் லாரியை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய லாரி போலீசாரிடம் ஒப்படைப்பு
கடமலைக்குண்டு: ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன், மயிலாடும்பாறை வழியாக செல்லும்போது சந்தேகப்படும்படி சென்ற டிப்பர் லாரியை மறித்து டிரைவர் தினேஷிடம் 29, விசாரித்தார். போடியில் இருந்து மண் கொண்டு செல்வதாக கூறினார். மண் கொண்டு செல்லப்படுவதற்கான அனுமதி சீட்டும் இருந்துள்ளது. ஆனால் லாரியில் மணல் இருந்தது. மணல் கொண்டு செல்வதற்காக அனுமதி இல்லாததால் லாரியை கைப்பற்றி கடமலைக்குண்டு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.