ADDED : ஜூலை 21, 2025 02:16 AM
புகையிலை பதுக்கிய இருவர் கைது
போடி: மதுரைவீரன் தெரு முத்து 37. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் முத்துவை கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
போடி: மீனாட்சிபுரம் சுருளி தெரு முகமது ரபீக் 60. இவர் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை தனது பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் முகமது ரபீக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 91 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு
போடி: சங்கராபுரம் மேற்கு தெரு தீபிகா 25. இவரது கணவர் கோயம்புத்துாரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தீபிகா நேற்று முன்தினம் வீட்டில் டி.வி., பார்த்து கொண்டிருந்தார். அப்போது கிழக்குத் தெருவை சேர்ந்த அன்பில் ராஜ்குமார் என்பவர் தீபிகா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையை பிடித்து இழுத்து, தகாத முறையில் நடக்க முயன்றார். தீபிகா சத்தம் போடவும், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி, தப்பி ஓடி விட்டார். பாதிக்கப்பட்ட தீபிகா புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
டீசல் திருடர்களை தேடும் போலீசார்
பெரியகுளம்: மேல்மங்கலம் வடக்கு தெரு ரமேஷ் 42. தனியார் பள்ளியின் பஸ் டிரைவர். இவர் வடுகபட்டி பாலகிருஷ்ணா பெட்ரொல் பங்க் அருகே காலியிடத்தில் தான் ஓட்டி வந்த பஸ்ஸை நிறுத்தினார். இரவில் மர்ம நபர்கள் ரமேஷ் நிறுத்தியிருந்த பஸ்சில் 100 லிட்டர் டீசலும், அதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு பள்ளி பஸ்சின், வேன் என மூன்று வாகனங்களில் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 500 மதிப்புள்ள 260 லிட்டர் டீசலை திருடிச் சென்றனர் என்ற விபரம் மறுநாள் காலை தெரியவந்தது. ரமேஷ் புகாரில், தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார் டீசல் திருடிய மர்ம நபர்கள் குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்நால்வர் மீது வழக்கு
போடி: தர்மத்துப்பட்டி இந்திரா காலனி அழகர்சாமி 52. இவரது தந்தை சுருளிக்கு சொந்தமான காலி இடத்தை தனது மகன் அழகர்சாமிக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார். இந்த இடத்திற்கு அழகர்சாமியின் மூத்த சகோதரரின் மகன்கள் விவேக், சூர்யா, விஜயபாரதி உறவினர் பிரதீப் ஆகியோர், 'எங்களுக்கும் உரிமை உள்ளது' எனக்கூறி பிரச்னை செய்து வந்தனர்.
நேற்று அழகர்சாமி நடந்து வரும் போது வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி காயம் ஏற்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். அழகர்சாமி புகாரில் போடி தாலுகா போலீசார் விவேக், சூர்யா உட்பட நால்வர் மீது, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மாமியாருக்கு கொலை மிரட்டல் : மருமகன் கைது
போடி: மணியம்பட்டி மேற்கு தெரு திவ்யா 25. இவரது கணவர் நாராயணன் 34. இவர் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி, துன்புறுத்தினார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். கணவர், நேற்று மாமியார் வீட்டிற்கு சென்று திவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி காயம் ஏற்படுத்தினார். விலக்கிவிட வந்த மாமியார் நாகமணியை தகாத வார்த்தைகளால் திட்டி, மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட திவ்யா புகாரில் போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
இரும்பு கடையில் டூவீலர் திருட்டு
பெரியகுளம்: வடகரை ரபீக் ராஜா. மயானக்கரை தெருவில் இரும்பு கடை வைத்துள்ளார். இவரது கடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலரை, இரவில் 2 மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. வடகரை போலீசார் வீடியோ பதிவுகள் மூலம் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மனைவி மாயம் கணவர் புகார்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு சுதாகர் 36. தேனியில் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவருக்கு மனைவி, ஏழு வயது மகன் உள்ளார். ஜூலை 2ல் இவரது மனைவி திவ்யா 29, அரியலுார் சென்று டி.சி., வாங்கி வருவதாக வாட்ஸ் அப் போன் மூலம் தகவல் தெரிவித்து, சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சுதாகர் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வயிற்று வலி: பெண் தற்கொலை
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி அருகே கோட்டார்பட்டி நடுத்தெரு அழகர்சாமி மகள் சவுமியா 21. ஓராண்டாக வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.